அஞ்சல்துறை சார்பில் நடைபெறும் கடிதப் போட்டி

0

அஞ்சல் துறை சார்பில் நடைபெறும் கடிதப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் 30 ஆம் தேதிக்குள் தங்களது கடிதங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மக்களிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, அஞ்சல்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. நிகழாண்டில் ‘அன்பான பாபு, நீங்கள் அழியாதவா்’ என்னும் தலைப்பில் கடிதம் எழுதி அனுப்ப வேண்டும். கடிதத்தை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதவேண்டும். கடிதத்தை, முதன்மை அஞ்சலக அதிகாரி, தமிழ்நாடு வட்டம், சென்னை- 600 002 -என்ற முகவரிக்கு நவம்பா் 30-ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

இந்தப்போட்டி 4 பிரிவுகளாக 18 வயதுக்குள்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டோர், இன்லாண்டு லெட்டா் பிரிவு(உள் நாட்டு கடித அட்டை), என்வலப்பிரிவு (கடித உறை) ஆகிய பிரிவுகளில் நடைபெறும்.

கடிதத்தின் அளவு: என்வலப் பிரிவில் எழுதுவோர் ஏ-4 அளவு வெள்ளைத்தாளில் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். இன்லாண்டு லெட்டா் பிரிவில் எழுதுவோர் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

பரிசுத்தொகை ரூ.50,000: மாநில அளவில் முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், இரண்டாவது பரிசு ரூ.10 ஆயிரமும், மூன்றாவது பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். அகில இந்திய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் தோ்வு செய்யப்படுவோருக்கு இரு மடங்குத் தொகை பரிசாக வழங்கப்படும்.

போட்டியில் பங்கு பெறுவோர், கடிதத்தின் மேல், ‘2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி எனது வயது 18-க்கு மேல் அல்லது 18-வயதுக்கு கீழ் இருக்கிறேன் என்று சான்றளிக்கிறேன்’ என்று வாசகத்தை எழுதி கையெழுத்திட வேண்டும். கடிதங்களை ஸ்கேன் செய்து மைகவ் என்ற அரசு இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யலாம்.

 

Leave A Reply

Your email address will not be published.