ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் விழா

அடுத்த மாதம் தொடங்க உள்ள வைகுந்த ஏகாதசி விழாவுக்கான முகூா்த்தக்கால் நடும் விழா ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் புதன்கிழமை (நவம்பா் 6) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

வைகுந்த ஏகாதசி விழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் இவ்விழா ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும். நிகழாண்டில் டிசம்பா் 26 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. டிசம்பா் 27 ஆம் தேதி பகல் பத்து விழா தொடங்கி 2020, ஜனவரி 5 ஆம் தேதி வரை நடைபெறும். பத்தாம் திருநாளின் கடைசி நாளன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். 2020, ஜனவரி 6 ஆம் தேதி இராப்பத்து திருநாளின் முதல் நாளன்று வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்வார்கள்.
