மணப்பாறை அருகே வழிப்பறி கொள்ளையர்கள் கைது

மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறி கொள்ளைகள் தொடந்து நடைபெற்று வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக மணப்பாறை டிஎஸ்பி., குத்தாலலிங்கம் தலைமையில் தனிப்படை போலீசார் மணப்பாறை முழுவதும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மணப்பாறை அடுத்த வளநாடு வெள்ளையான்குடிபட்டியை சேர்ந்த சரவணன், ராமு, தேவராஜ் என்பதும், இவர்கள் ஆசிரியைகளான பாத்திமாராணி, ரூபணா ராணி ஆகியோரின் தங்க சங்கிலிகளை பறித்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 5 பவுன் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
