திருவெறும்பூர் அருகே மழை காரணமாக 100 ஏக்கர் நாற்றாங்கால் பயிர் நீரில் மூழ்கின

திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூரில் கனமழை காரணமாக 100 ஏக்கர் நடவு பணிக்காக பயிரிடப்பட்டிருந்த நாற்றங்கால் தண்ணீரில் மூழ்கியதைத் தொடர்ந்து வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) சரவணன் நேரில் ஆய்வு செய்தார்.அதில் தண்ணீரில் மூழ்கியுள்ள நாற்றங்காலில் பாதிக்கு மேல் ஆழுகிவிடும் என்றும் அதனால் விவசாயிகள் இந்த நாற்றை நம்பி இருக்காதீர்கள் புதிதாக நாற்று விட்டு நட முடியாது. இயந்திர நடவும் செய்யமுடியாது. அதனால் வெளி ஏரியாவில் நாற்று போட்டு உள்ளவர்களிடமிருந்து நாற்று வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினார்.

மேலும் இந்த பகுதி மழைக்காலத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு முறையான வடிகால் இல்லை என்றும், வடிகால் வசதி இருந்தால் சுமார் 500 ஏக்கர் விவசாயம் பாதிக்காது என்று கூறியதோடு விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்துகொள்ள அறிவுறுத்தினார். மேலும் இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பதாகவும் தெரிவித்தார். அப்போது திருவெறும்பூர் வேளாண் உதவி அலுவலர் இசபெல்லா மற்றும் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சங்கிலிமுத்து, மதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
