காவிரி ஒழுங்காற்று குழுவின் 19-வது கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது

0
D1

காவிரி நீர் பங்கீடு தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழுவின் 19-வது கூட்டம் முதன்முறையாக நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார்.

N2

காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டம் மாலை 6 மணி வரை நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருச்சியில் நடத்தப்பட்டுள்ள இந்த கூட்டம் வழக்கமான ஒரு கூட்டம் தான். சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பின்படி காவிரி நீரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
காவிரி நதியை பொறுத்தவரை பிலிகுண்டு உள்பட மொத்தம் 8 நீர்ப்பிடிப்பு பகுதிகள் உள்ளன. இதில் ஒன்றான கல்லணையை இன்று (நேற்று) காலை நேரடியாக பார்த்துவிட்டு வந்தோம். கல்லணையில் இருந்து பாசனத்திற்கு நீர் பகிர்ந்து வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது டெல்டா பாசன பகுதியில் மழை பெய்து வருவதால் நிலைமை சீராக உள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக மாநிலம் அணை கட்டினால் தமிழகத்திற்கு நீர்வரத்து தடைபட்டுவிடும், எனவே அங்கு அணை கட்ட அனுமதிக்க கூடாது என தமிழகம் ஆட்சேபனை தெரிவித்து உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா ஏற்கனவே மத்திய அரசின் நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்து உள்ளது. அங்கு அணை கட்டுவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இந்த பிரச்சினையை தகுதியின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்ட முடியாது.
மழைக்காலங்களில் தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து உபரி நீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது என குற்றம் சாட்டப்படுகிறது. எங்களை பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவது தான் முக்கிய பணி. ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடக அணைகளிலும் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருந்ததால் மாதா மாதம் வழங்கவேண்டிய தண்ணீரை அவர்கள் திறந்து விட முடியவில்லை.

இந்த கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவின் உறுப்பினர் செயலர் நீரஜ் குமார், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உதவி இயக்குனர் ராம்பால் சிங், மேலாண்மை ஆணையத்தின் தமிழகத்திற்கான உறுப்பினர் ராமமூர்த்தி, கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பாசன துறை தலைமை பொறியாளர் பங்காருசாமி, கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்வாரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய் பிரகாஷ், கேரள மாநிலத்தின் நீர்ப்பாசன துறை துணை தலைமை பொறியாளர் ஹரிகுமார், புதுச்சேரி மாநிலத்தின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம், தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில் நுட்பகுழு அதிகாரிகள் சுப்பிரமணியன், பட்டாபிராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.