திருச்சியில் இரண்டு நாட்களாக தொடர் மழை

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறியதால் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக அடைமழை பெய்து வருகிறது. திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை கொட்டி தீர்த்தது.
நேற்று 2-வது நாளாக மதியம் 1 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த பலத்த மழையினால் கண்டோன்மெண்ட் அய்யப்பன்கோவில், மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன், டி.வி.எஸ். டோல்கேட், கருமண்டபம் பகுதிகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சாலை ஓரங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. கருமண்டபம் பகுதியில் பல வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நின்றது.

கனமழையால் காவிரி பாலத்தின் 3-வது தூண் மேல் பகுதியில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த பள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக போலீசார் ‘பேரிகாட்’ வைத்து உள்ளனர். ஏற்கனவே சிறிய அளவில் இருந்த பள்ளம் தொடர்ந்து பெய்த மழையினால் பெரிதாகி சேதம் அடைந்து உள்ளது. பாலத்தில் ஏற்பட்டுள்ள இந்த பள்ளத்தை உடனடியாக சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் மலைக்கோவில் ராஜவீதியில் பழமையான மாடி வீடு இடிந்து அருகில் இருந்த ஒரு ஓட்டு வீடு மேல் விழுந்ததில் அந்த வீட்டில் வசித்து வரும் 6 பேர் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதிர்ஷ்டவசமாக 6 பேரும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
சாரல் மழை தூறிக்கொண்டே இருந்ததால், வீட்டில் மின்விசிறி இல்லாமல் தூங்க முடிந்தது.
