சுஜித் பெற்றோருக்கு ஸ்டாலின் ஆறுதல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் 4 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டான். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு ஆவாரம்பட்டி பாத்திமாபுதூரில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சுஜித்தின் பெற்றோருக்கு நேரில் சென்றுஆறுதல் கூறியதுடன் குழந்தையின் பெற்றோருக்கு ரூ10 லட்சம் நிதி வழங்கினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர், ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, செந்தில்பாலாஜி மற்றும் பலர் சென்றனர்.

அதன்பின்னர் அவர், பேரிடரில் ஒரு குடிமகனை காப்பாற்ற வேண்டியது அரசின் முதல் கடமை. இந்த தோல்விக்கு என்ன காரணம்? தொழில்நுட்ப அணுகுமுறையில் தமிழகம் பின்தங்கியுள்ளதா? திட்டமிட்டு செயல்படுவதில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் தமிழக அரசு இன்னும் முழுமையான அனுபவம் பெறவில்லையா? சுஜித்தை மீட்க ராணுவம் அல்லது துணை ராணுவத்தை ஏன் முன்கூட்டியே அழைக்கவில்லை? ஒரு சுஜித்தை காப்பாற்ற முடியாத அ.தி.மு.க. ஆட்சியினர் பேரிடர் நேரங்களில் எப்படி தமிழக மக்களை காப்பாற்றப்போகிறார்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பினார்.

தொண்டர்கள், “பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள்”, “பாதுகாப்பற்ற முறையில் உள்ள ஆழ்துளை கிணறுகள்” போன்றவற்றின் தகவல்களை சேகரித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்து அவற்றை மூடுவதற்கும், தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கும் உதவிட வேண்டும் என்றார்.
