முசிறி அருகே தடுப்புச்சுவரில் மோதிய லாரி தீப்பிடித்தது

நேற்று முன்தினம் இரவு கரூரில் இருந்து, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உயர்ரக துணி வகைகளை ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று சென்னை துறைமுகத்தை நோக்கி வந்தது. அந்த லாரி குளித்தலை வழியாக முசிறி புறவழிச்சாலையில் வந்தபோது சந்தபாளையம் பிரிவுரோடு அருகே சாலையின் நடுவே புதிதாக அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் மீது,லாரியின் முன்பகுதி ஏறி சிறிது தூரம் சென்றது. இதனால் உராய்வின் காரணமாக டீசல் டேங்க் தீப்பிடித்து, லாரியின் பின்பகுதியில் தீ பரவியது.
இது குறித்து அப்பகுதி மக்கள் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்து லாரியில் எரிந்து கொண்டிருந்த துணிகளை, சாலையில் தூக்கிப்போட்டு, தண்ணீரைக்கொண்டு தீயை அணைத்தனர். லாரியில் எரிந்த தீயையும் அணைத்தனர்.

இருப்பினும் லாரியின் பின் பகுதி மற்றும் துணிகள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் சிலர், லாரியில் பாதி எரிந்தநிலையில் கிடந்த துணிகளை அள்ளிச்சென்றனர். இது குறித்து லாரி டிரைவர் துரைசாமி, முசிறி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
