திருச்சி அருகே முகமூடி அணிந்து பள்ளி ஆசிரியர் தாக்குதல்

தொட்டியம் அருகிலுள்ள ஏளூர்ப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், முதுகலை வரலாற்று ஆசிரியராக மணப்பாறை அருகிலுள்ள பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி பணியாற்றி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை காலை, பள்ளியில் மாணவர்களுக்கு பெரியசாமி பாடம் நடத்தி கொண்டிருந்தபோது முகமூடி அணிந்து வந்த ஒருவர் அவரைத் தாக்கிவிட்டு, பள்ளிச் சுற்றுச்சுவரைத் தாண்டி குதித்து, அங்கு மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்துக் கொண்டு தயார்நிலையில் இருந்த மற்றொருவருடன் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து முசிறி கல்வி மாவட்ட அலுவலர் செல்வியிடம் பெரியசாமி தகவல் அளித்துவிட்டு, காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர்.
