திருச்சியில் நாளை முதல் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்

0
D1

திருச்சி மாநகரில்   தீபாவளி பண்டிகையையொட்டி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வியாழக்கிழமை  (அக்.24) முதல் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படத் தொடங்கும் என மாநகரக் காவல் துறை அ.அமல்ராஜ் அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில்,  தேசிய நெடுஞ்சாலைகளில் எக்காரணத்தைக் கொண்டும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது.
பேருந்துகள், வேன்கள், கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களை  அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிச்செல்ல வேண்டும்.  சிக்னல்களில் பயணிகளை இறக்கி, ஏற்றக் கூடாது.
வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து, கடைகளை அமைத்து விற்பனை செய்யக் கூடாது. பட்டாசு வியாபாரிகள் உரிய அனுமதியுடன் உரிமம்  பெற்ற இடத்தில் மட்டும்தான் விற்பனை செய்யவேண்டும். தரைக்கடை மற்றும் தள்ளுவண்டியில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. குறிப்பிட்ட விதிமுறைகளை மீறுவோர் மீது  நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், விதிகளை மீறுவோர் குறித்த புகார்களை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 100 என்ற எண்ணிலும், மாநகரக் காவல் ஆணையரின் கட்செவி தொடர்பு எண்ணிலும் (96262 -73399) தெரிவிக்கலாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தற்காலிக பேருந்து நிலையங்கள்:
தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், பயணிகளின் நலன் கருதியும் அக்டோபர் 24 (வியாழக்கிழமை)
முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரையிலும் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படும்.
தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்  சோனா- மீனா திரையரங்கம்  அருகிலுள்ள பகுதியிலிருந்தும்  (வில்லியம்ஸ் சாலை) புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கங்களில் செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் ரவுண்டானா பகுதியிலிருந்தும் இயக்கப்படவுள்ளன.
தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து திருச்சி  வழியாக சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்ல வேண்டும். மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் வழித்தடங்களில் எந்தவித மாற்றமுமின்றி வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
மத்தியபேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்துநிலையத்திற்கு சுற்றுப் பேருந்துகள் இயக்கவும், அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக பேருந்துநிலையங்களில் பொதுமக்களுக்கு இடையூறு  ஏற்படாத வண்ணம் காவல்துறையின் பாதுகாப்பும்,  மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீர், பொதுக் கழிப்பிடவசதி, ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் உள்ளிட்ட  ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

N3

Leave A Reply

Your email address will not be published.