அரியமங்கலம் குப்பை கிடங்கில் நவீன எந்திரங்கள்

0
full

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் திருச்சி-தஞ்சை சாலையில் உள்ள அரியமங்கலம் பகுதியில் 47 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 50 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வந்தது. அந்த இடத்தில் 40 ஏக்கர் பரப்பில் 7.59 லட்சம் கனமீட்டர் அளவுக்கு குப்பைகள் தேங்கி உள்ளன. இந்த குப்பைகளால் நிலத்தடி நீர் மாசுபட்டதுடன், சுற்றுப்புறங்களில் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தியது.

அரியமங்கலம் குப்பை கிடங்கில் தேங்கி உள்ள 5 லட்சம் டன் குப்பைகளை விஞ்ஞான முறைப்படி அப்புறப்படுத்த ‘பயோ மைனிங்’ திட்டம் ரூ.49 கோடி செலவில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த ஜனவரி மாதமே நடந்தது. அதன் பிறகு டன் கணக்கிலான குப்பைகளில் இருந்து மீத்தேன் வாயுவை வெளியேற்றும் வகையில் குப்பை மேட்டை பகுதி பகுதியாக பிரிக்கும் பணி நடந்தது. இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு தொடர்ச்சியாக 7 நாட் களுக்கு மேல் எரிந்தது.

ukr

குப்பை மேட்டில் உள்ள திடக்கழிவுகளை பிரித்தெடுக்கும் வகையில் ‘கன்வேயர் பிரேம்கள்’ என்ற நவீன எந்திரங்கள் அமைப்பதற்காக 2 ஏக்கர் இடம் காலியாக விடப்பட்டிருந்தது. தற்போது அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு 30 நவீன ‘கன்வேயர் பிரேம்கள்’ கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த எந்திரங்களை நிறுவும் வகையில் ‘ஷெட்’ அமைக்கும் பணியில் தனியார் நிறுவன பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

poster

வருகிற தீபாவளி பண்டிகை முடிந்ததும் குப்பைகளை பிரித்தெடுக்கும் ‘கன்வேயர் பிரேம்கள்’ பொருத்தும் பணி தொடங்க உள்ளது. இந்த பணிகள் முழுமையாக முடிய ஒரு மாதம்வரை ஆகலாம் என்று கூறப் படுகிறது. எனவே, டிசம்பர் மாதம் முதல் 5 லட்சம் டன் குப்பைகளும் பிரித்தெடுக்கும் பணி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரியமங்கலம் குப்பைக்கிடங்கில் இருந்து பிரித்தெடுக்கப்படும் திடக்கழிவுகளில் இருந்து பழைய துணிகள் மற்றும் டயர்கள் போன்றவற்றை தனியாக பிரித்து சிறிது, சிறிதாக அரைக்கப்படும். பின்னர் அவை சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக அனுப்பி வைக்கப்படும். அங்கு நிலக்கரியுடன் சேர்த்து அவற்றை எரிபொருளாக பயன்படுத்துவார்கள். பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படும். பயோ மைனிங் திட்டத்திற்காக கொண்டு வரப்பட்ட 30 ‘கன்வேயர் பிரேம்கள்’ மற்றும் 40 பணியாளர்கள் மூலம் தினமும் 200 டன் முதல் 300 டன் வரையிலான குப்பைகள் பிரித்தெடுக்கப்படும். 2 ஆண்டுகளில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த இடம் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’’ என்றார்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.