பாரதிதாசன் பல்கலைக்கழக கலைவிழா– 2019

பாரதிதாசன் பல்கலைக்கழகக் கலைப் பண்பாட்டு மையம், ஒவ்வொரு ஆண்டும் நடத்திவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கலைவிழா (BDU FEST)18-ம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. 18.10.2019 அன்று மாலை கலைப்பண்பாட்டுப் பேரணியுடன் தொடங்கிய இக்கலைவிழாவில் மொத்தம் 32விதமான போட்டிகள் இசை, நடனம், நாடகம், இலக்கியம், நுண்கலை ஆகிய ஐந்து பிரிவுகளில் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுமைக்குட்பட்ட திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 2500 மாணவ, மாணவியர்கள் இக்கலைப் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
இக்கலைவிழாவின் நிறைவுவிழாவும் பரிசளிப்புவிழாவும் ஞாயிறு அன்று மாலை பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ,முனைவர் ப. மணிசங்கர் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக புதுச்சேரி இசைத்தமிழ் மற்றும் நாடத்தமிழ் அறிஞர், ‘கலைமாமணி’முனைவர் அரிமளம் பத்மநாபன் கலந்துகொண்டார்.
கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குபரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நான்காம், ஐந்தாம் இடம் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு சான்றிதழுடன் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. அத்துடன் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கிய கல்லூரிக்கும், கல்லூரியின் சிறந்த கலைப்பண்பாட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.

பல்கலைக்கழக பதிவாளர், முனைவர் க. கோபிநாத், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள், முனைவர் சொக்கலிங்கம், முனைவர் நித்யா மற்றும் முனைவர் சசிதர் முளுகு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இக்கலைவிழாவின் ஒட்டுமொத்த முதலிடத்தை பெரம்பலூர் தந்தை ஹான்ஸ் ரோவர்கல்லூரியும் ஒட்டுமொத்த இரண்டாம் இடத்தை திருச்சி காவேரி மகளிர்கல்லூரியும் பெற்றன. இக்கல்லூரிகளுக்கு சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.
பாரதிதாசன் பல்கலைக்கழக கலைப்பண்பாட்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ. இலக்குமி பிரபா நன்றி கூறினார்.முன்னதாக பல்கலைக்கழக மகளிரியல் துறைபேராசிரியர்,முனைவர் ந. முருகேஸ்வரி விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றார்.
