திருச்சி அருகே வங்கி கொள்ளைக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல்

0
1 full

திருச்சி அருகே நெ.1 டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 470 பவுன் நகைகள் மற்றும் ரூ.19 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.


இந்நிலையில் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த திருவாரூர் முருகன், சுரேஷ் மற்றும் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை கிராமத்தை சேர்ந்த கணேசன், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல்தான், நெ.1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் கொள்ளையில் ஈடுபட்டது என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சுரேசை திருச்சி கோட்டை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று 6-வது நாளாக விசாரணை நடைபெற்றது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட கணேசனை, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த கொள்ளிடம் போலீசார் ஸ்ரீரங்கம் உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் மனுவை விசாரித்த மாதிஸ்திரேட் சிவகாமசுந்தரி, வருகிற 24-ந் தேதி வரை 7 நாட்கள் கணேசனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தவிரட்டார்.

இதையடுத்து கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீசார் கணேசனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற விசாரணையில் கணேசன் கொடுத்த தகவலின் அடிப்படையில், அவருடைய சொந்த ஊரான குருவித்துறைக்கு சென்ற போலீசார், அங்கிருந்து ஒரு வேனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

இந்த வேனை பயன்படுத்தியே பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றியதும், பறிமுதல் செய்யப்பட்ட வேன் கணேசனின் மனைவி பெயரில் இருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாக கணசேனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.