ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை: திருச்சி to மலேசியா விமானம் ரத்து

நேற்று முன்தினம் மாலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் இருந்த திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் பகுதியை சேர்ந்த முத்துவேலுக்கு(வயது 54) திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த மருத்துவ உதவியாளர்கள், அவருக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்து, அவரை திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருச்சி விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் திருச்சி வந்தபோது, திருச்சி விமான நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள், டாக்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது. இருப்பினும் அந்த விமானம், திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுமதி கிடைக்காததால், இரவு 10 மணியளவில் தரை இறங்கியது. இதையடுத்து உடனடியாக விமானத்தில் இருந்து பயணி முத்துவேல் இறக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு விமானம் பறக்கும்போது சராசரியாக 7 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருக்க வேண்டும் என்பது விமான நிலைய ஆணையத்தின் உத்தரவு ஆகும். ஆனால் முத்துவேலுக்கு பயன்படுத்தப்பட்ட சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்து போனதால், அந்த விமானத்தில் 6 சிலிண்டர்கள் மட்டுமே முழுமையாக இருந்தன. இதனால் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு புறப்பட இருந்த அந்த விமானத்திற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 115 பயணிகளில் 50 பயணிகளுக்கு நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு திருச்சியில் இருந்து மலேசியா புறப்பட்ட மற்றொரு ஏர் ஏசியா விமானத்தில் அனுமதி அளிக்கப்பட்டு, அவர்கள் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதம் இருந்த 65 பயணிகள் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு, நேற்று காலை மலேசியா சென்ற ஏர் ஏசியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
