மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைநீர்

0

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கரிக்கான்குளத்தை யொட்டிய பகுதியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மழை பெய்தால் அந்த குளத்தில் இருந்து மழைநீர் வெளியே செல்வதற்கான வழியில்லை. ஆகவே மழைநீர் செல்வதற்கான வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வருவாய்துறையினரிடம் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மணப்பாறை பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. கரிக்கான்குளத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவும் மழை பெய்ததால் கரிக்கான்குளம் நிரம்பியது.

இதனால் மழைநீருடன், குளத்தில் இருந்து வெளியேறிய நீரும் சேர்ந்த நிலையில் மழைவெள்ளம் நள்ளிரவில் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது. நேரம் ஆக, ஆக குடியிருப்புகளுக்குள்ளும் மழைவெள்ளம் புகுந்தது. பல வீடுகளுக்குள் திடீரென தண்ணீர் புகுந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள், நள்ளிரவு முதல் என்ன செய்வதென்று தெரியாமல், அச்சத்தில் தூங்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

food

மேலும் அந்த பகுதியில் அதிக அளவில் புதர்கள் மண்டிக்கிடப்பதால், அதில் இருந்த பாம்புகள் உள்ளிட்ட விஷஜந்துக்கள் மழைநீருடன் குடியிருப்பு பகுதிக்குள் வந்தன. இதை பார்த்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

நேற்று காலை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலக்குழு உறுப்பினர் தங்கமணி தலைமையில் பொதுமக்களே களத்தில் இறங்கி, பொக்லைன் எந்திரம் மூலம் மழைநீர் செல்லும் வழிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். வீடுகளில் இருந்து மழைநீரை வெளியேற்றுவதற்கான பணிகளையும் மேற்கொண்டனர். இதையடுத்து மழைநீர் வடியத் தொடங்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

மீண்டும் மழை பெய்தால் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்து கொள்ளும் நிலை உள்ளதால், அதை தடுக்க உரிய நடவடிக்கைகளை வருவாய்த்துறையினரும், நகராட்சி நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.