தீபாவளியை முன்னிட்டு மொத்தம் 770 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

0
full

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் திருச்சி மலைக்கோட்டை என்.எஸ்.சி.பி. ரோட்டில் தற்காலிக காவல் உதவி மையம் அமைப்பது வழக்கம். அதன்படி, தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, சத்திரம் பகுதி கடைவீதிகளில் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டு வருவது வழக்கம். அதையொட்டி, கூடுதல் பாதுகாப்புக்காக போலீசார் நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று என்.எஸ்.சி.பி. சாலையில் கோட்டை போலீஸ் நிலையம் சார்பில் தற்காலிக காவல் உதவி மையம் திறக்கப்பட்டது. அதை மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அமல்ராஜ் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகரம் கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புக்காக தேவையான போலீசார் நியமித்தும், கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள், டெமோ கேமரா மற்றும் பொது விளம்பரங்கள் மூலமாக எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் குற்றங்களை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

poster

பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அவர்கள் தங்களது உடைமைகளையும், குழந்தைகளையும் கவனமாக பார்த்து கொள்ளவும், அசம்பாவிதங்கள் அல்லது சந்தேகப்படும் படியான நபர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கவும், அது சம்பந்தமாக புகார் கொடுக்கவும், என்.எஸ்.சி.பி. ரோடு தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

half 2

மேலும், சத்திரம் மற்றும் மத்திய பஸ் நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு போலீசார் மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து எவ்வித குற்றச் சம்பவம் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் குற்ற நடத்தை உடையவர்களை கண்காணிக்க என்.எஸ்.சி.பி ரோடு பெரியகடைவீதி சந்திப்பு (மலைவாசல் அருகில்), சிங்காரதோப்பு பூம்புகார் அருகில், பெரியகடைவீதி கரீம் ஸ்டோர் அருகில், மெயின்கார்டுகேட், தெப்பக்குளம் ரகுநாத் ஜங்சன் அருகில், பெரியகடைவீதி சந்துக்கடை, அஞ்சுமன் பஜார்(காந்தி மார்க்கெட் தஞ்சாவூர் ரோடு சந்திப்பு) மற்றும் பெரியகடைவீதி முகப்பு (மார்க்கெட் ஆர்ச்) ஆகிய 8 இடங்களில் நிறுவப்பட்டு பைனாகுலர் மூலம் போலீசார் கண்காணிப்பார்கள்.

மேலும் என்.எஸ்.சி.பி. ரோடு சந்திப்பில் ஒரு டெமோ கேமராவும், சின்னகடைவீதி, சத்திரம் பஸ் நிலையம், பெரியகடைவீதி, நந்திகோவில் தெரு, ஆகிய பகுதிகளில் 46 கண்காணிப்பு கேமராக்களும், மெயின்கார்டுகேட், சிங்காரத்தோப்பு, சூப்பர் பஜார், மதுரை ரோடு, டபிள்யூ.பி. ரோடு முதல் ஜாபர்‌ஷா தெரு ஆகிய பகுதிகளில் 21 கேமராக்களும், எஸ்.ஆர்.சி. சாலையில் 26 கேமராக்களும், சத்திரம் பஸ் நிலையம், அண்ணா சிலை பகுதிகளில் 84 கேமராக்களும், ராமகிரு‌‌ஷ்ணா பாலம் முதல் நத்தர்‌ஷா பள்ளிவாசல் வரை 23 கேமராக்களும் ஆக மொத்தம் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வெடிகுண்டு கண்டறியும் போலீசார் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு மத்திய பஸ் நிலையம், ரெயில்வே ஜங்சன் மற்றும் பிற முக்கிய பகுதிகளிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்ற நடத்தையை கண்காணிக்கவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவும் 100 குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு பணிக்காகவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்கவும் போலீஸ் துணை கமி‌‌ஷனர்கள் நி‌ஷா, மயில்வாகனன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளுக்காக 1 கூடுதல் போலீஸ் துணை கமி‌‌ஷனர், 5 உதவி கமி‌‌ஷனர்கள், 21 இன்ஸ்பெக்டர்கள், 76 சப்-இன்ஸ்பெக்டர்கள், 355 போலீசார், 100 ஆயுதப்படை போலீசார், 50 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்கள் மற்றும் 160 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 770 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.