திருச்சி மாவட்டத்தில் ரூ.1.67 கோடியில் புறக்கடை அசில்கோழி வளர்ப்பு திட்டம்

0
1 full

திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 14 ஒன்றியங்களில், தலா 250 வீதம் 3,500 பேருக்கும், ஒருசிறப்புநிலை பேரூராட்சியில் 150 பேருக்கும், ஏழு தேர்வுநிலை பேரூராட்சிகளில் தலா 225 வீதம் 1,575 பேருக்கும், எட்டு பேரூராட்சிகளில் (நிலை-1) தலா 350 வீதம் 2,800 பேருக்கும், ஆக மொத்தம் 8,025 பெண் பயனாளிகளுக்கு விலையில்லா அசில் கோழிகள் வழங்கிட ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் ‘புறக்கடை அசில்கோழி வளர்ப்புத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சிக்கு நல்ல வரவேற்பும், அதிக தேவையும் ஏற்பட்டுள்ளதை தமிழக அரசு கருத்தில் கொண்டு புறக்கடை கோழிவளர்ப்பு மூலம் ஊரக மகளிருக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி, தொழில் முனைவோராக உருவாக்கும் நோக்கத்தில், கோழியின அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ‘புறக்கடை அசில் கோழி வளர்ப்புத் திட்டம்’, மூலம் விலையில்லா அசில் கோழிகள் நடப்பாண்டில் (2019-20) வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் கடந்த ஆண்டு (2018-19) பெரும் வரவேற்பை பெற்றதால், 385 ஒன்றியங்கள் மட்டுமல்லாது 528 பேரூராட்சிகளுக்கும் தற்போது விரிவுபடுத்தப்பட உள்ளது. சென்னை நீங்கலாக தமிழ்நாட்டில் உள்ள 2.40 இலட்சம் ஊரக பெண் பயனாளிகள் பயனடைய ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயனாளி ஒருவருக்கு, ரூ.1,875 விலையுள்ள நான்குவார வயதுடைய 25 அசில் கோழிகளும், ‘புறக்கடை அசில் கோழிவளர்ப்பு ஒருநாள் பயிற்சிக்காக ரூ.200ம், ஆக மொத்தம் ரூ.2075, முழு மானியத்தில் வழங்கப்படுகிறது. பயனாளிகளுக்கு அசில்கோழிகள் வழங்கப்பட்டபின் அவற்றுக்கு தேவையான தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம் மற்றும் மருத்துவ சிகிச்சை பணிகள் கால்நடை மருந்தகங்கள் மூலம் வழங்கப்படும். தமிழக ஊரக வாழ்வாதார திட்ட எண் வழங்கப்பட்டு ஏழ்மையில் வாடும், ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நிரந்தரமாக வசிக்கும் பெண் பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு 30 சதவிகிதம் ஒதுக்கீடும், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையும் பயனாளிகள் தேர்வில் கடைப்பிடிக்கப்படுகிறது. மகளிர் குழுக்களுக்கு முன்னுரிமை உண்டு.

இலவச கறவைப்பசு, வெள்ளாடு, செம்மறியாடு, கோழியின திட்டப் பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய இயலாது. பயனாளிகள், தங்களுக்கு வழங்கப்படும் இலவச அசில் கோழிகளை ஓர் ஆண்டுக்கு புறக்கடை வளர்ப்பு முறையில் தீவனச் செலவின்றி பராமரிப்பதால், முதல் 2 மாதங்களில் சேவல்களை மட்டும் விற்பனை செய்து, ரூ.5,000 வரையிலும், மீதமுள்ள பெட்டை கோழிகள் இடும் 1,250 முட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.10,000 வரையும், ஆக மொத்தம் ரூ.15,000 ஆண்டொன்றிற்கு வருமானம் ஈட்டமுடியும். நடப்பாண்டில் (2019-20), திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், தலா 250 வீதம் 3,500 பேருக்கும், ஒரு சிறப்புநிலை பேரூராட்சியில் 150 பேருக்கும், ஏழு தேர்வு நிலை பேரூராட்சிகளில் தலா 225 வீதம் 1,575 பேருக்கும், 8 பேரூராட்சிகளில் (நிலை-1) தலா 350 வீதம் 2,800 பேருக்கும் என மொத்தம் 8,025 பெண் பயனாளிகளுக்கு இலவச அசில் கோழிகள் வழங்கிட ரூ.1 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.