திருச்சியில் புதிய கட்டிட அனுமதிக்கு கலெக்டரின் தீடீர் நிபர்ந்தனையும் விளக்கமும் !

திருச்சியில் புதிய கட்டிட அனுமதிக்கு கலெக்டரின் தீடீர் நிபர்ந்தனையும் விளக்கமும் !
திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் கட்டிட அனுமதிக்கு கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளை கலெக்டர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி மாநகராட்சி அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி நிர்வாக பகுதிகளில் ஒரு மனையில் 7000 சதுர அடி பரப்பிற்குள் அமையும் தரை தளம் மற்றும் 2 தளங்கள் அல்லது வாகனம் நிறுத்தும் தளம் மற்றும் 3 தளங்களில் 12 மீட்டர் உயரத்திற்கு மிகாமல் அதிகபட்சம் 8 குடியிருப்புகள் கொண்ட கட்டுமானத்திற்கும், 2000 சதுர அடி பரப்பளவிற்குள் அமையும் தரைதளம் மற்றும் முதல் தள வணிக கட்டுமானத்திற்கு மட்டுமே திட்ட அனுமதியுடன் கூடிய கட்டிட உரிமை வழங்க உள்ளாட்சிகளுக்கு நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின் செயல்முறை ஆணை அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. இது அனுமதியற்ற மனை பிரிவுகளுக்கு பொருந்தாது.

இவ்வாறு திட்ட அனுமதி கோரி பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உள்ளாட்சிகள் உரிய ஆவணங்களைப் பெற்று முழுமைத் திட்ட நிலப் பயன்பாடு, விரிவு அபிவிருத்தி திட்ட நிலப்பயன்பாடு, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள் 2019ன் படியான விதிகளை சரிபார்த்தும் அரசு, உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் உள்ளாட்சிக்கான உரிய கட்டணங்களை வசூலித்தும், உள்ளாட்சி அளவிலேயே திட்ட அனுமதி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேற்படி அதிகாரி பகிர்வுக்கு மேற்பட்ட பரப்பளவு உள்ள கட்டிடங்களுக்கும் மற்றும் அனைத்து இதர உபயோக கட்டிடங்களுக்கும் திட்ட அனுமதி வேண்டி நேரடியாகவோ அல்லது சம்பந்தபட்ட உள்ளாட்சி மூலமாகவோ உள்ளூர் திட்ட குழுமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வழங்கப்பட்ட அதிகார பகிர்வுக்கு கூடுதல் பரப்பளவு கொண்ட கட்டிடங்கள், உபயோக கட்டிடங்கள் மற்றும் நில அபிவிருத்திகளுக்கு உள்ளாட்சிகளில் பெறப்படும் அனுமதி செல்லதக்கதல்ல. அவ்வாறு அனுமதி பெறப்பட்டு அல்லது அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டும் கட்டுமானங்கள் அனைத்தும் அனுமதியற்ற கட்டுமானமாக கருதி நகர ஊரமைப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகவலை கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.
