லலிதா ஜிவல்லரி நகையுடன் சிக்கிய பிரபல திருடன்

0
Business trichy


திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த புதன் கிழமை இரவு சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 2 பேர் தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நகைக்கடையில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள 28 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது விலங்குகளின் முகத்தைப் போன்ற முகமூடிகளை கொள்ளையர்கள் அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சிலரைப் பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் லலிதா ஜூவல்லரியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வந்தது.

Half page

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் இருந்த ஒருவன் ஆற்றங்கரை வழியாக தப்பிச் சென்றுவிட, மற்றொருவன் போலீசாரின் பிடியில் சிக்கினான். அவன் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் ஏராளமான தங்கநகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நகைகளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களில் இருந்த பார் கோடை வைத்து சோதனையிட்டபோது அந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்டவனிடம் நடத்திய விசாரணையில் அவன் மடப்புரத்தைச் செர்ந்த மணிகண்டன் என்பதும், தப்பி ஓடியவன் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது. பிடிபட்ட மணிகண்டனிடம் இருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொள்ளையன் சிக்கியது குறித்து திருச்சி தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி போலீசார் திருவாரூர் சென்று மணிகண்டனை திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே தப்பி ஓடிய சுரேஷ், பிரபல ஏடிஎம் கொள்ளையன் முருகனின் தம்பி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மீதமுள்ள நகைகளை சீராதோப்பில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாக மணிகண்டன் கூறியதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் சீராதோப்பில் முகாமிட்டுள்ளளனர்.

Full Page

Leave A Reply

Your email address will not be published.