திருட்டு ஒன்றும் திருச்சிக்கு புதிதல்ல…

திருச்சியை உலுக்கிய கொள்ளைகள்
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி சுவற்றில் துளையிட்டு ரூபாய் 13 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் 6 காவலாளிகள் பணியில் இருந்தும் நடந்த இந்த துணிகர சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெரிய அளவில் கொள்ளை சம்பவங்கள் நடப்பது திருச்சிக்கு ஒன்றும் புதிதல்ல. திருச்சி மாநகரின் முக்கிய பகுதியாக விளங்கும் என்எஸ்பி ரோட்டில் மலைக்கோட்டைக்கு எதிரே உள்ள அமர் ஜுவல்லரியில் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் ஷட்டரை திறந்து 31 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருந்ததை போலீசார் உறுதி செய்தனர் அப்போதைய மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராமையா (குற்றம் மற்றும் போக்குவரத்து) தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மோகன்சிங் என்ற பிரபல கொள்ளையன் சிக்கினான்.அவனிடம் நடத்திய விசாரணையில் 13 பேர் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது மோகன்சிங்-கிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவன் கொடுத்த தகவலின் பேரில் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பசந்த்லால் (32) மற்றும் மும்பையை சென்று மற்ற கொள்ளையர்களை போலீசார் அள்ளினர். கொள்ளையடிக்கப்பட்டதங்கத்தையும் போலீசார் மீட்டனர்.
சமீபத்தில் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் கடந்த ஜனவரி மாதம் 29 தேதி வங்கி திறந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது வங்கியின் சுவர் துளையிடப்பட்ட லாக்கரின் பூட்டுகள் கேஸ் வெல்டிங், கட்டர் மூலம் உடைக்கப்பட்டு ரூபாய் 5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இச்சம்பவம் நடந்து பத்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை வங்கிக் கொள்ளை சம்பவத்தில் எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று லலிதா ஜுவல்லரி பார்வையிட வந்த எஸ்.பி ஜியாவுல் ஹக் கூறினார். இப்போது லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 7 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சியை குறிவைத்து தொடர்ந்து கொள்ளை அடிக்கும் மர்ம கும்பலால் போலீசார் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
-தினமலர்
