திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் ரகசியமும், தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியமும்

0

திருச்சியில் பாரம்பரியமிக்க, வரலாற்றுச் சிறப்புகளை கொண்ட கல்லூரியாக விளங்கி வருவது தூய வளனார் கல்லூரி. புனித சூசையப்பர் கல்லூரி என்று அழைக்கப்படும் இக்கல்லூரி (St. Joseph’s College), 1844 ஆம் ஆண்டு இயேசு சபையினரால், திருச்சிராப்பள்ளியில் துவக்கப்பட்டது.

புனித ஜோசப் கல்லூரி திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் இளங்கலை, முதுகலைக் கல்வி பட்டப்படிப்புகளை வழங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய இக்கல்லூரி 1982 இல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது அதனுடன் இணைக்கப்பட்டது. பின்னர் தன்னாட்சி அந்தஸ்து பெற்றது.

175 ஆண்டுகள் பழமை வாய்ந்தது திருச்சி தூய வளனார் கல்லூரி. இக்கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, எழுத்தாளர் சுஜாதா, சினிமா இயக்குனர் பிரபு சாலமன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இக்கல்லூரியில் பயின்று உள்ளனர். இக்கல்லூரிக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு தேசிய தர மதிப்பீட்டு குழுவினால் ஏ ப்ளஸ் தகுதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆண்டு தேசிய தர மதிப்பீட்டு குழுவினரால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு கடந்த ஜுன் மாதம் இக்கல்லூரியின் மனிதவளம், கட்டமைப்பு, நிதிவளங்கள் ஆகியவற்றை குறித்து ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வின் அடிப்படையில் இக்கல்லூரிக்கு ஏ ப்ளஸ் ப்ளஸ் அந்தஸ்து வழங்கி உள்ளது. இந்தியாவிலேயே ஏ ப்ளஸ் ப்ளஸ் அந்தஸ்து பெற்ற முதல் தன்னாட்சி கல்லூரி என்ற பெருமையை திருச்சி தூய வளனார் கல்லூரி பெற்றுள்ளது.

இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் கூறும்போது. 175ஆம் ஆண்டு இக்கல்லூரி கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தியாவிலேயே முதன் முறையாக ஏ ப்ளஸ் ப்ளஸ் அந்தஸ்து பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நிலையில் எங்கள் கல்லூரியில் புதிதாக சட்டப்பள்ளி அமைப்பதற்கு திட்டமிட்டு வருகிறோம்.

திருச்சி தூய வளனார் கல்லூரியை, பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு குழு அமைத்து உள்ளோம். மேலும் மக்களை சார்ந்த ஆய்வுகள் பல நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த ஏ ப்ளஸ் ப்ளஸ் தகுதியை இந்தியாவிலேயே முதல் முறையாக நாங்கள் பெற்றிருப்பதால் இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும். அரசு அதிக நிதி உதவி செய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

திருச்சியில் புனித வளனார் கல்லூரி சார்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில் 3,500 பேர் பங்கேற்றனர்.

 

புனித வளனார் கல்லூரி தொடங்கி 175 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், 5 கி.மீ, 10 கி.மீ. என இரு பிரிவாக போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறார், சிறுமியர், முதியோர், கல்லூரி முன்னாள் மாணவ, மாணவியர் என தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தொடங்கி வைத்தார். மாநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ், கல்லூரி நிர்வாகிகள் ரெக்டார் லியனார்டு பிராண்டோ, செயலாளர் எஸ். பீட்டர், முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர், தாளாளர் இலங்கேஸ்வரன், ஜோசப் பள்ளி தலைமையாசிரியர் எஸ். ஜோசப் கென்னடி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நிகழ்வில் 10 கி.மீ. தொலைவுக்கான போட்டி ஆண்கள் பிரிவில் வி. தேவராஜ், பெண்கள் பிரிவில் கே. கீதா ஆகியோர் முதல் பரிசாக தலா ரூ. 25,000 பெற்றனர். 5 கி.மீ. தொலைவு போட்டியில் பள்ளி சிறுவர்களுக்கான போட்டி ஆண்கள் பிரிவில் பி. பொன்னிசைக்கி, பெண்கள் பிரிவில் ஆர். சிவகாமி ஆகியோரும், பணியாளர்கள் போட்டி ஆண்கள் பிரிவில் செல்வகுமார், பெண்கள் பிரிவில் கவிதா, கல்லூரி மாணவியர் பிரிவில் இ. பிரீத்திரீனா, மூத்தோர் பிரிவில் கே. பிரபாகரன், முன்னாள் மாணவர் பிரிவில் ஜெ. அருண், மூத்த குடிமகன்கள் பிரிவில் டி.எம். மனோகாரன் ஆகியோர் முதல் பரிசுகளை (தலா ரூ. 7000) பெற்றனர்.

தவிர போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றுகள், சீருடை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

குளிரூட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு


திருச்சி தூய வளனார் கல்லூரி சார்பில், கல்லூரிச் சாலை பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ. 7 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு வந்தது. இப்பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்வில் திருச்சி மாநகரக் காவல்துணை ஆணையர்கள் ஆ.மயில்வாகனன், என்.எஸ்.நிஷா, தூய வளனார் கல்லூரி அதிபர் லியோனார்டு பெர்னாண்டோ, செயலர் எஸ்.பீட்டர், முதல்வர் எம். ஆரோக்கியசாமி சேவியர், பொருளாளர் கு.ராயப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.