திருச்சியில் பழிக்குப்பழி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

0

 

திருச்சி மாவட்டம் லால்குடி பக்கம் உள்ள திண்ணியம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிதுரை மகன் சுதாகர் (வயது 29). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த பன்னீர் குடும்பத்தினருக்கும் இடையே அங்கு ஒரு இடத்தில் அமைக்கப்பட்டிருந்த குப்பை குழியில் குப்பை கொட்டுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

இதனால் ஏற்பட்ட தகராறில் சுதாகரின் அண்ணன் சுரேஷ் என்பவரை பன்னீரின் தம்பிகளான ரவி, ராமகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரிவாளால் வெட்டினார்கள்.

அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சுரேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் உடல் நலம் இன்றி 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் இறந்தார். தனது அண்ணன் சாவுக்கு பன்னீரின் தம்பிகள் தான் காரணம் என நினைத்த சுதாகர் அவர்கள் 3 பேரையும் ஒழிக்காமல் விடமாட்டேன் என சபதம் போட்டார். இதனை அறிந்த பன்னீரின் தம்பிகள் 3 பேரும் ஊரை விட்டு வெளியேறி தலைமறைவானார்கள்.

food

பன்னீரின் தம்பிகள் தனக்கு பயந்து தலைமறைவானாலும் ஆத்திரம் அடங்காத சுதாகர், பன்னீரின் குடும்பத்தினரையாவது கொலை செய்து பழி தீர்க்க வேண்டும் என திட்டம் போட்டார். இதையடுத்து கடந்த 14-4-2013 அன்று சுதாகர், தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்த பன்னீரின் தாயார் செல்லம்மாளை (65) அரிவாளால் வெட்டினார். இதனை தடுக்க வந்த அதே ஊரை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அதன்பின்னர் பன்னீரின் அத்தை அமராவதி (63) வீட்டிற்கு சென்று அவரையும் அரிவாளால் வெட்டினார். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த செல்லம்மாளும், அமராவதியும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தனர். சதீஷ் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தார்.

இதையொட்டி லால்குடி போலீசார் சுதாகரை கைது செய்து திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 2 பெண்களை கொலை செய்ததாகவும், ஒரு கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் சுதாகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் குற்றம்சாட்டப்பட்ட சுதாகருக்கு 2 கொலைகளுக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனை என இரண்டு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், கொலை முயற்சிக்கு 7 வருடம் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி கே. முரளிசங்கர் தீர்ப்பு கூறினார்.

சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டு இருப்பதால், சுதாகர் ஒரு ஆயுள் தண்டனை மட்டுமே அனுபவிப்பார் என அரசு வழக்கறிஞர் சம்பத் குமார் கூறினார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.