திருச்சியில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் நூதன போராட்டம்.

0
Business trichy

திருச்சி-கரூர் சாலையில், மாயனூரில் இருந்து முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் பிரிவு சாலை வரை திருப்பராய்த்துறையில் உள்ள சுங்கச்சாவடி மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கொடியாலம் பிரிவு சாலையில் இருந்து திருச்சி செல்லும் சாலையானது மிகவும் பழுதடைந்து பள்ளமும், படுகுழியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக திண்டுக்கரை பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகலாக இருப்பதாலும், அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளாலும் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி செல்லும் வாகனங்களும், கரூரில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு இடையே தான் சென்று வருகின்றன. இதனால், இந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

பள்ளமும், படுகுழியுமான இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி பலமுறை சுங்கச்சாவடி நிர்வாகத்திடமும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும் எடுத்து கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, அடிக்கடி மழை பெய்வதால் பள்ளமான சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தடுமாறி கீழே விழுந்து ரத்தக்காயம் அடைகின்றனர்.

Rashinee album

நூதன போராட்டம்

Image

இந்தநிலையில், இந்த சாலையை சீரமைக்கக்கோரி திண்டுக்கரை பஸ் நிறுத்தத்தில் சாலையில் உள்ள பள்ளத்தில் வாழைக்கன்றுகளை நட்டு நேற்று நூதன போராட்டம் நடத்தப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் லெனின், அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் வினோத்மணி, சமூக ஆர்வலர் அய்யாரப்பன், காவிரி மீட்புக்குழு கரும்பாசலம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த யாரும் வராததால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர், திருப்பராய்த்துறையில் உள்ள சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை குறித்து முறையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தாசில்தார் சுப்பிரமணியன், ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராதாகிரு‌‌ஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். திண்டுக்கரையில் பள்ளமாக உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.