திருச்சி அருகே கள்ளசாராயம் விற்ற மூவர் கைது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சமலையில் பெட்டிக்கடையில் கள்ளச்சாராயம் விற்ற மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

உப்பிலியபுரம் ஊராட்சி ஓன்றியத்தைச் சேர்ந்த டாப்செங்காட்டிப்பட்டியில் சட்ட விரோதமாகவும், திருட்டுத்தனமாகவும் அரசு மதுபானமும், கள்ளச்சாராயமும் விற்கப்படுவதால் மாணவர்களும் மது அருந்தி வருவதுடன், அந்த பகுதியைச் சேர்ந்த பெண்களிடம், சிறுமிகளிடம் மது அருந்தியவர்கள் ஆபாச பேச்சுக்கள் பேசுவதாகவும் கூறி நேற்றுமுன் தினம் டாப்செங் காட்டுப்பட்டியல் பழங்குடியன பொதுமக்கள் சாலை மறியல்செய்தனர்.
இதனையடுத்து நேற்று உப்பிலியபுரம் போலீசார் திடீரென அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது டாப்செங் காட்டுப்பட்டியைச் சேர்ந்த முத்துசாமி மகன் தமிழரசன்(39) என்பவரின் பெட்டிக்கடையில் அவரும், சேலம் மாவட்டம் பச்சமலை வெங்கமுடியைச் சேர்ந்த சந்திரன் மகன் செல்லதுரை(33) என்பவரும் கள்ளச்சாராயம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. இதே போல் டாப் செங்காட்டுப்பட்டி வரதன் மகன் மாணிக்கம்(45) தனது பெட்டிக்கடையில் விற்பனைக்காக கள்ளச்சாராயம் வைத்திருந்தது தெரிந்தது. அவர்களிடமிருந்து கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனர்.
