இந்தி மொழிக்காக விருது பெற்ற திருச்சி ரயில்வே ! அடேங்கப்பா விருது !

வட மாநிலத்தவரை அதிக அளவில் பணிநியமனம் செய்த சர்ச்சையில் சிக்கியுள்ள திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு, இந்தியைச் சிறப்பாக அமல்படுத்தியதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.

“ இந்தியாவை உலக அளவில் ஒருங்கிணைப்பதற்கு ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்” என இந்தி தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பைப் பதிவு செய்தநிலையில் தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக அமித்ஷாவே விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு கொடுக்கப்பட்ட விருது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள், “ இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள ரயில்வே நிர்வாகத்தில் அலுவலகப் பயன்பாடு மற்றும் பேச்சு ஆகியவற்றில் இந்தியை சிறப்பாக அமல்படுத்தும் கோட்டத்துக்கு ஒவ்வொரு வருடமும் விருது வழங்கப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட கோட்டங்களிலேயே, கடந்த 2018-ம் ஆண்டு இந்தியைச் சிறப்பாக அமல்படுத்தியதாக திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு விருது அறிவிக்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் விருதும் வழங்கப்பட்டுவிட்டது” என்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக நீதிப்பேரவையின் மாவட்ட தலைவர் ரவிக்குமார், “ ரயில்வே துறையில் அதிகளவில் வடமாநிலத்தவர் தேர்ச்சி பெறுவதும் அவர்களுக்குத் தமிழகத்தில் பணி வழங்கப்படுவதும் புரியாத புதிராகவே உள்ளது. இந்தியைத் தமிழகத்தில் மறைமுகமாகப் புகுத்தும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 800 உதவியாளர்கள் உள்ளிட்ட குரூப் டி பணியிடங்களுக்குச் சமீபத்தில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தற்போது 528 பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன.


அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் 475 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள். இவர்களில் பலரும் பீகார், உ.பி, ம.பி, மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். வெறும் 53 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற ஆதாரமும் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற தென்னக ரயில்வே கோட்டத்தில் தமிழக எம்.பி.க்கள் ஒன்றாகச் சேர்ந்து, ரயில்வே துறையில் தமிழர்களுக்கே வேலை வழங்கக்கோரி கோரிக்கை வைத்தனர். இந்தக் கூட்டத்தில், ` தமிழக ரயில்வே துறையில் தமிழ் மொழி பேசத் தெரியாதவர்களைப் பணியில் சேர்ப்பது தொடர்கிறது. குறிப்பாகத் தொழில்நுட்ப பதவிகளைவிட மக்களோடு நேரடியாகத் தொடர்புடைய பொறுப்புகளில் தமிழ் மொழி பேச எழுதத் தெரியாத அதிகாரிகளை நியமிப்பதால், தமிழக மக்கள் அதிகளவில் சிரமப்படுகின்றனர்.
அதனால் தமிழ் பேசத் தெரிந்த எழுதத் தெரிந்த அதிகாரிகளையே நியமிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தனர். “ இந்த விவகாரம் தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்போம்” எனத் தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் உறுதி அளித்திருந்தார்.
இந்தியை வெளிப்படையாகத் திணித்தால் எதிர்ப்பு வருகிறது என்பதால், மத்திய அரசு தனதுகீழ் உள்ள துறைகள் மூலமாக இந்தியை மறைமுகமாகப் புகுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில்தான் திருச்சி கோட்டத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது” என்றார் கொதிப்புடன்.

இதுகுறித்து விளக்கம் அறிய திருச்சி ரயில்வே அதிகாரி ஒருவர், “ திருச்சி கோட்டத்துக்கு விருது கிடைத்தது எங்களுடைய சிறப்பான பணிக்கான அங்கீகாரம்தான். மற்றபடி இதில் சர்ச்சைகளுக்கு இடமில்லை” என்றார்.
– விகடன்
