பெல் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கனிமொழியிடம் கோரிக்கை மனு

பெல் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி
திருச்சி பெல் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி திராவிடர் தொழிலாளர் அணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அலுவலகத்தில், திராவிடர் தொழிலாளர் அணியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கனிமொழியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் மாநில தலைவர் சேகர் கூறும்போது, மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் திருச்சி பெல் நிறுவனத்தில் கடந்த 35 ஆண்டுகாலமாக பணி புரிந்து வரும் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்யக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக கூறினார்.

மேலும் 2000 மேற்பட்ட தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பணி நிறைவுவபெற்ற நிலையில் தற்போது 800க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருவதாகவும், அவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் திராவிடர் தொழிலாளர் அணி சார்பில் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.
