நீட் தேர்வு ஆள்மாறாட்ட எதிரொலி – திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு !

0
Full Page

தமிழகத்தில் நடப்பாண்டில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 5,500 மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவன் படித்து வந்தது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த மோசடி பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் மோசடியில் ஈடுபட்ட மாணவனை பிடிக்க தேனி மாவட்ட கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 39 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்களை சரிபார்க்க மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டது. அதன்படி மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Half page

இந்நிலையில், திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ் பயிலும் 150 மாணவர்களின் சான்றிதழ்கள், கையெழுத்து, புகைப்படம், கைரேகை உள்ளிட்டவற்றை கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) அர்ஷத் பேகம் தலைமையில் பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர் அடங்கிய குழு சனிக்கிழமை காலை முதல் மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பொறுப்பு அர்ஷத் பேகம் கூறுகையில்.

“மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் உத்தரவின்படி தற்போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மாணவ மாணவிகளின் சேர்க்கையின் போது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. தேனியில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்த ஆள்மாறாட்டம் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து அடுத்த சில நாட்களில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சான்றிதழ்களையும் சரி பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பின் இறுதி அறிக்கை மருத்துவக்கல்வி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கப்படும்” எனக் கூறினார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.