சசிகலாக்கு எதிராக செயல்பட்டால் தலையை சீவி விடுவேன்!.. திருச்சியில் ஆவேசப்பட்ட திவாகரன்.

அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் திவாகரன் தலைமை வகித்தார். இளைஞரணி மற்றும் மாணவரணி செயலாளர் ஜெய்ஆனந்த் முன்னிலை வகித்தார்.
கூட்டத்திற்கு பின்னர் திவாகரன் நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியை அடுத்து கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காகவும், வரும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள கட்சியை தயார்படுத்தவும் இந்த கூட்டம் ஏற்பாடு நடத்தப்பட்டது. எங்களது நிர்வாகிகள் அரசியலுக்கு புதியவர்கள் என்பதால் அவர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.
சசிகலா என் சகோதரி என்ற முறையில் அவரை காப்பற்றவேண்டும். அவரை மீட்க வழியில்லாமல் இல்லை. ஆனால் அவர் அதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும். சசிகலாவை வீழ்த்த எதிரி வெளியில் இருந்து வந்திருந்தால் தலையை சீவியிருப்பேன். உள்ளே குடும்பத்தில் உறவினர் எதிரி என்பதால் கையை பிசைந்து கொண்டிருக்கிறேன்,
அமமுக ஆண்டிகள் கூடி கட்டிய மடம் போன்றது.

செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் வரிசையில் இப்போது புகழேந்தி. எடப்பாடி எனக்கு பணம் கொடுத்து அமமுகவில் குழப்பம் ஏற்படுத்த செய்வதாக கூறுவது கையாளாகாத குற்றச்சாட்டு. எனக்கு பணம் கொடுக்க எவனும் பிறந்து வரவில்லை. தினகரன் தனிமைப்படுத்தப்பட்டால் அதிமுக ஒன்றிணையும்.
சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு 133 எம்எல்ஏக்கள், ஒரு கேபினட், துணை பொதுச்செயலாளர் பதவியோடு தான் தினகரனிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு சென்றார் சசிகலா. இன்று என்ன வைத்திருக்கிறார்.
இப்போது இருப்பது ஜெயலலிதா காலத்து அதிமுக அல்ல. நிறைய விஷயங்களை அதிமுக தலைமையில் இருப்பவர்கள் சமரசம் செய்து கொள்கின்றனர்.
தமிழக நலனை பாதிக்க கூடிய விஷயங்களை கூட புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதை அப்படியே செயல்படுத்த வேண்டும் அல்லது ஆதரிக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். ஆட்சியாளர்கள் நிலைமை தாழ்ந்து போய்விட்டது. சுயமரியாதை எங்கே இருக்கிறது. ஆட்சியை மட்டும் எடப்பாடி பழனிசாமி கட்டுபாட்டில் வைத்திருக்கிறார். கட்சியை கட்டுபாட்டில் வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.
தமிழக அரசியலில் இனி நடிகர்கர் ஆதிக்கம் இருக்காது. தமிழக மக்கள் செயல்திறன் பார்த்து தான் அங்கீகாரம் தருவார்கள். இவ்வாறு திவாகரன் கூறினார்.
