திருச்சி ரயில்வே பணிக்கு 262 பேரில் 16 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் நியமனம்:

0
1

திருச்சி ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிக்கு 262 இடங்களில் 16 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் நியமனம்:

 

தெற்கு ரெயில்வேயில் காலிப்பணியிடங்களுக்கு ரெயில்வே தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடைபெறுவது வழக்கம். இதில் தேர்ச்சி பெறுவதில் தமிழகத்தை சேர்ந்தவர்களை விட வடமாநிலத்தினரே அதிகம் தேர்ச்சி பெற்று பணியாற்றி வருகின்றனர். திருச்சி கோட்ட ரெயில்வேயிலும் வட மாநிலத்தினர் அதிகம் பேர் பணியாற்றுகின்றனர்.

 

இந்த நிலையில் கடந்த ஆண்டு தண்டவாள பராமரிப்பு பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களில் 262 பேருக்கு திருச்சி கோட்டத்தில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. பணி நியமனத்திற்காக அவர்களது சான்றிதழ் சரிபார்ப்பு திருச்சி ஜங்ஷனில் ரெயில்வே திருமண மண்டபத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது.

2
வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வட இந்தியர்கள்.

இதில் பெரும்பாலானோர் வட மாநில இளைஞர்களாக காணப்பட்டனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் விரல் விட்டும் எண்ணும் அளவில் இருந்தனர். சான்றிதழ் சரிபார்த்த பின் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இது குறித்து ரெயில்வே வட்டாரத்தில் கேட்ட போது, “திருச்சி கோட்டத்தில் என்ஜினீயரிங் பிரிவில் தண்டவாள பராமரிப்பு பணியில் காலியாக உள்ள 262 பணியிடங்களுக்கு புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். 4 பேர் கேரள மாநிலத்தினர் ஆவர். மற்றவர்கள் அனைவரும் பீகார், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள்” என்றனர்.

 

திருச்சி கோட்ட ரெயில்வேயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பணி நியமனத்திலும் வட மாநிலத்தினரின் எண்ணிக்கை அதிகம் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போதும் வட மாநிலத்தினர் அதிக அளவில் பணியில் சேர்ந்துள்ளதால் அவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. பொன்மலை ரெயில்வே பணிமனையில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதிலும், தொழில் பழகுநர் பயிற்சியிலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் நியமிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

மேலும் தமிழக ரெயில்வே பணியிடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி கோட்ட ரெயில்வேயில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியில் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இதுகுறித்து டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கத்தினர் கூறுகையில், “ரெயில்வே தேர்வுகளில் வடமாநிலத்தினர் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். வடமாநில ஊழியர்களால் தகவல் பரிமாற்றம் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவை பின்பற்றுவதிலும் பிரச்சினை ஏற்படுகிறது. பாதுகாப்பு பிரிவில் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. நாளுக்கு நாள் வட மாநிலத்தினரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தமிழக ரெயில்வே பணியிடங்களில் தமிழர்களின் எண்ணிக்கை இல்லாமல் போய்விடும். ரெயில்வேயில் பணி நியமனத்தில் அந்தந்த மாநிலத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றனர்

3

Leave A Reply

Your email address will not be published.