புத்தக வியாபாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள்.

0
1

புத்தக வியாபாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள்.

சங்க இலக்கியம் தொடங்கி பாக்கெட் நாவல்கள் வரை தமிழில் பல லட்சம் புத்தகங்கள் ஓர் ஆண்டில் விற்பனை ஆகின்றன. அத்தகைய புத்தகங்கள் நம்மை வந்தடைவது எப்படி?

ஒரு புத்தகமானது பலரது உழைப்பைத் தாண்டி தான் ஒரு வாசகனின் கைகளில் படைப்பாக வந்து சேர்கிறது. எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்ந்தெடுத்து அதை ஒரு அச்சு வடிவம் பெற வைப்பதில் தொடங்கி நம்மிடம் புத்தகமாக வந்து சேர்ப்பது வரை முக்கிய பங்கு ஆற்றுபவர்கள் புத்தக தயாரிப்பாளர்களாக இருக்கும் பதிப்பாளார்களும் அவர்களிடமிருந்து வியாபாரிகளும் ஆவர். அவர்களின் சமூகப் பொறுப்பு பற்றி ஒரு பக்கம் பேசினாலும், இத்தொழிலில் அடிப்படை புத்தகங்கள் விற்பது தான்.

2

திருச்சியில் தற்போது நடந்துவரும் புத்தகக் கண்காட்சியிலிருக்கும் பதிப்பாளர்களிடம் இது பற்றி கேட்கையில்,

“ஒரு ஸ்டால் போடுவதற்கு, இங்கயே பன்னிரண்டாயிரம் வாடகை ஆகுது. அது போக, சென்னையிலிருந்து புத்தகங்களை இங்கு கொண்டு வர குறைந்தது 6000 ரூபாய்
வரை பிடிக்கும் அது போக போக்குவரத்து, சாப்பாடு, கூலி செலவுகள் வேற.எப்படியும் ஒரு லட்ச ரூபாய்க்காவது வியாபாரம் ஆனால் மட்டும் தான் கையில் 5000ஆவது நிக்கும்” என்று வருத்தத்தோடு பகிர்ந்தார் ஜெயஸ்ரீ பப்ளிகேஷன்ஸ் கார்த்திக்.

கார்த்திக்

கூடவே, ஆன்லைன் புத்தக விற்பனையகங்களுக்கும் தங்களுக்கும் உள்ள வித்யாசத்தைப் பற்றி அவர் கூறுகையில்  ”இப்ப வாங்க வரும் சில பேர், புத்தகத்தை பாத்து பிலிப்கார்ட், அமேசான்னு தேடி பாக்குறாங்க. இத விட அதுல பத்து ரூபா விலை கம்மியா இருந்தாலும் புத்தகத்த வச்சிட்டு கிளம்பிடுறாங்க. இத விட பெரிய ஏமாற்றம் ஒரு புத்தக வியாபாரிக்கு இருக்க முடியாது. வியாபாரிக்கும் நுகர்வோருக்கும் இடைல தரகு பார்ப்பது தான் இந்த  அமேசானும், பிலிப்கார்ட்டும். இவர்கள் முதலே இல்லாமல் லாபம் ஈட்டுகிறவர்கள். அவர்களோடு எங்களை ஒப்பிடுவது  எந்த வகையிலும் நியாயம் ஆகாது. அது அட்டும் இல்லை, புத்தகக் கண்காட்சிக்கு வரும் போது பல புதிய புத்தகங்கள் நமக்கு அறிமுகம் ஆகும், அது பிலிப்காட், அமேசான்ல  நடக்காது” என்றார்.

‘’கடந்த நாட்களில், திருச்சியில் பெய்து வரும் தொடர் மழையாலும், புத்தகக் கண்காட்சியைப் பற்றிய போதிய விளம்பரம் இல்லாததாலும் மக்களின் வருகை சற்று குறைவாக உள்ளது” என்கிறார் இன்னொரு பதிப்பாளர். இந்தச் சூழல் தொடர்ந்து நிலவுவதால் வியாபாரமும் குறைவாகவே இருப்பதாகவே பல வியாபாரிகள் கருதுகிறார்கள்.

இந்த வருட புத்தக கண்காட்சி பற்றி கேட்கையில், ”நான்கு வருடங்கள் கழித்து திருச்சியில் கொஞ்சம் பெரிய அளவில் ஒரு புத்தகத் திருவிழாவை இப்போ நடத்தியிருக்காங்க. அதனால நாங்க பெரிய எதிர்பார்ப்போட வந்தோம்.ஆனா நெனச்ச அளவுக்கு கூட்டம் வரலைன்னு தான் சொல்லனும்.  இன்னு கூடுதலா விளம்பரம் பன்னியிருக்கலாம்” என்கிறார் தமிழ்தேச புத்தக அங்காடியின் சரவணன்.

சரவணன்

சரவணனின் கருத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் ”இந்த கண்காட்சி திருச்சியின் மையப்பகுதில் நடத்தப்படுது. அது மட்டுமே போதாது என நினைக்கிறேன். போதிய விளம்பரமும் தேவை. போன முறை இதே திருச்சியில் கேகே நகரில் சிறிய அளவில் ஒரு புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. அங்கே போதிய விளம்பரம் இருந்ததால் ஒப்பீட்டளவில் அதிக கூட்டமும் வந்தது. அங்கேயே வியாபாரமும் நன்றாக நடந்தது. அது தான் எங்களுக்கு ஒருவித  நம்பிக்கையையும் கொடுத்தது. இந்த நம்பிக்கையை எல்லோரும் கொடுத்தால், தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் சென்று புத்தகக் கடைகள் போட நாங்கள் தயார்” என உறுதியோடு சொல்கிறார் ஸ்ரீ ராஜ ராஜ சோழன் புக் செல்லர்ஸின் ரமேஷ் .

ரமேஷ்

மற்ற வியாபாரங்களைப் போன்றது அல்ல புத்தக வியாபாரம் என்கிறார் மதுரா தி புக் கேலரியின் மோகன் ,”இந்த புத்தகக் கண்காட்சிகள்லாம் பாக்குறதுக்கு வேணும்னா பெருசா பிரம்மாண்டமா இருக்கலாம், ஆனா புத்தகம் விக்கிறதுங்குறது புலி வால பிடிச்ச கதை தான், அவ்வளது லேசுல போட்ட காசயும் எடுக்க முடியாது லாபம் பாக்குறதுக்கும் கடுமையா கஷ்டப்படனும். கண்காட்சியோட முகப்புல இருக்குற கடைகள் நல்லா ஓடும். ஆன பின்னாடி இருக்குற கடைகள்ல நல்ல புத்தகங்களே இருந்தாலும், பெருசா வியாபாரம் ஆகாது . மக்கள் கூட்டம் அதிகமா இருக்கும் போது தான் எல்லா கடைகளுக்கும் மக்கள் பரவலாக போவாங்க, வியாபாரமும் நல்லா நடக்கும். அதனால ஜனங்க முதல் கடையிலயே  நிறைவாகிடாம, முழுசா சுத்திட்டு வந்துவிட்டு பிறகு புத்தகங்களை வாங்கனும். அந்த அனுபவமே தனி.” என்று தன் அனுபவத்தைச் சொன்னார்.

மோகன்

திருச்சியில் எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் உள்ளது என்றும் அவர்களின் கல்விக்கூட வளாகத்திலேயே புத்தக கண்காட்சிகளை சிறிய அளவில் நடத்தலாமென்றும் இது போல பெரியதாக அமைக்கப்படும் புத்தக கண்காட்சிகளுக்கு திருச்சி வட்டாரத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் தங்களுடைய மாணவர்களை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வர வேண்டுமென்றும் அதுவே புத்தக வியாபாரம் பெருகவும் தவிர சமூகத்தை வாசிக்கும் சமூகமாக்கும் வழி என்பதே புத்தக வியாபாரிகளின் ஒருங்கிணைந்த குரலாக ஒலிக்கிறது.

3

Leave A Reply

Your email address will not be published.