திருச்சியில் கல்லால் முகத்தை சிதைத்து பெண் கொலை – போலீசார் விசாரணை !

திருச்சியில் கல்லால் முகத்தை சிதைத்து பெண் கொலை – போலீசார் விசாரணை !
திருச்சி அருகே கல்லால் தாக்கி முகத்தை சிதைத்து பெண் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
,

புத்தாநத்தத்தை அடுத்த சின்னக்கவுண்டன்பட்டி அருகே உள்ள துணை மின் நிலையத்தின் பின் பகுதியில் நேற்று மாலை உடல் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடப்பதாக புத்தாநத்தம் போலீசாருக்கு தகவல் கிடைந்தது. அதன்பேரில் ஏட்டு கிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த பின்னர், இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம், வையம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். இறந்து கிடந்த பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கலாம். அந்த பெண்ணின் முகம் கல்லால் தாக்கி சிதைக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அந்த பெண் கொலை செய்யப்பட்டு சில நாட்கள் இருக்கலாம் என்றும் தெரியவந்தது. ஆனால் அந்த பெண்ணை பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
இதையடுத்து போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர் யார்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
