திருச்சியில் அமைச்சர் வேலுமணியின் காரை மறித்து முற்றுகையிட்ட பொதுமக்கள்.

திருச்சியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் வேலுமணி கலந்து கொள்கிறார். இதனையொட்டி நேற்றை தினம் பல இடங்களில் அவசர அவசரமாக ரோடுகள் பேட்ச் ஒர்க் பார்க்கப்பட்டது. திருச்சி காஜாமலை பெரியார் நகரில், 73 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள மாநகராட்சி பூங்காவை அமைச்சர் வேலுமணி திறந்த வைப்பார் என்பதால் அவ்வழியில் புதியதாக சாலைகள் போடப்பட்டன. அமைச்சர் செல்லும் பாதையில் உள்ள அலிகான் குளத் தெருவில், பாதியளவு மட்டுமே கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள பகுதியில் அமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை அமைச்சர் வேலுமணியின் காரை மறித்து, அவரை முற்றுகையிட்டனர். கலெக்டர் சிவராசு, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் ஆகியோரும் முற்றுகையில் சிக்கினர்.

பொதுமக்கள் முற்றுகையால் காரில் இருந்து இறங்கிய அமைச்சர் வேலுமணி விரைவில் சாலை அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தின் பேரில் கலைந்து சென்றனர். அமைச்சர் வேலுமணி காரில் இருந்து இறங்கி சென்ற போது அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் காரிலேயே அமர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
