திருச்சி மார்க்கெட்டை இடம் மாற்றம் பிரச்சனையில் பிஜேபி – வியாபாரிகள் போட்டி போராட்டம் !

0
1

திருச்சி மார்க்கெட்டை இடம் மாற்றம் பிரச்சனையில் பிஜேபிவியாபாரிகள் போட்டி போராட்டம் !

நரேந்திரமோடி பிறந்தநாளில் காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவதாக பாரதீய ஜனதா கட்சியும், அவர்களுக்கு எதிராக வியாபாரிகள் தரப்பில் போட்டி சுவரொட்டி ஒட்டப்பட்டு போராட்டம் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாநகரின் மையப் பகுதியில் இயங்கி வரும் காந்தி மார்க்கெட் கடந்த ஆண்டு மணிகண்டம் அருகே உள்ள கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் புதிய மார்க்கெட்டை திறந்து வைத்தனர். கள்ளிக்குடியில் ஒருநாள்கூட முழுமையாக செயல்படாத நிலையில், அங்கு காந்தி மார்க்கெட் வியாபாரிகள் யாரும் செல்லவில்லை. மாறாக காந்தி மார்க்கெட்டிலேயே தொடர்ந்து காய்கறி வியாபாரம் நடத்தி வருகிறார்கள். மேலும் கள்ளிக்குடிக்கு காந்தி மார்க்கெட் வியாபாரிகள் யாரும் செல்ல மாட்டார்கள் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2

 

இதனால், பலகோடி ரூபாய் மதிப்பில் கள்ளிக்குடியில் கட்டப்பட்ட மார்க்கெட் கட்டிடம் பயனற்று கிடக்கிறது.

 

இந்த நிலையில் வருகிற 17-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாளில், திருச்சி காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு மாற்றப்படா விட்டால் முற்றுகை போராட்டம் நடத்தி கள்ளிக்குடி காய்கறி மார்க்கெட் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என திருச்சி மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் நகரில் பல இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப்பிலும் அந்த அறிவிப்பு வலம் வந்து கொண்டிருக்கிறது. பாரதீய ஜனதா சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

 

4

மத்திய அரசு நபார்டு நிதி ரூ.100 கோடி மூலம் கட்டப்பட்ட திருச்சி கள்ளிக்குடி காய்கறி, பழங்கள் மற்றும் மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் நரேந்திரமோடி பிறந்தநாளான வருகிற 17-ந் தேதி மீண்டும் திறக்கப்பட வேண்டும். திறக்கப்படவில்லையெனில், அன்றைய தினம் பிற்பகல் மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தி, கள்ளிக்குடி காய்கறி வணிக வளாகம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே பாரதீய ஜனதா கட்சியின் போராட்ட அறிவிப்பை கண்டித்து, திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் போட்டி சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

 

முற்றுகை போராட்டம் அறிவித்துள்ள பாரதீய ஜனதா கட்சியினரின் கவனத்துக்கு…, மணிகண்டம் ஊராட்சிக்குட்பட்ட கள்ளிக்குடி கிராமத்தில் சுமார் 25 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள கள்ளிக்குடி மார்க்கெட் இடம், ஈரோட்டை சேர்ந்த சென்னியப்பன் ராமசாமி முதலியாருக்கு சொந்தமானது. அந்த இடத்தை இலவச பள்ளிக் கூடம், ஆஸ்பத்திரி, முதியோர் இல்லம் ஆகியவைகள் கட்டி பயன்படுத்துமாறு உயில் எழுதி வைத்து உள்ளதை மறைத்து அவரது வாரிசுகள் விற்றுள்ளனர். அதை சரிபார்க்காமல் திருச்சி மாவட்ட நிர்வாகம் வாங்கி கட்டிடமும் கட்டியுள்ளது.

 

கள்ளிக்குடி இடப்பிரச்சினை தொடர்பாக முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதெல்லாம் தெரியாமல் போராட்டம் அறிவித்துள்ள திருச்சி மாவட்ட பா...வினரே.., நீங்கள் அறிவித்த போராட்டம் நடந்தால் அன்றைய தினமே(17-ந் தேதி) திருச்சி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாரதீய ஜனதா கட்சி மற்றும் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போட்டி சுவரொட்டியால் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.