திருச்சி சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் கலாச்சாரப் பண்பாட்டு விழா .

திருச்சி சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் “செரால்டா 2019 – உயிர்ப்புடன் எழுந்து உலகை வெல்!”என்னும் பொருண்மையில் கலாச்சாரப் பண்பாடு மற்றும் முதலாம் ஆண்டு மாணவியரை வரவேற்கும் விழா 30.08.2019 – 31.08.2019 ஆகிய இருநாட்கள் நடைபெற்றது.
தொடக்கவிழா வெள்ளிக்கிழமையன்று காலை 9.30 மணியளவில் மாணிக்கவிநாயகர் அரங்கில் தொடங்கியது. விழாவின் சிறப்புவிருந்தினராக அறிவியல் விஞ்ஞானி ஏ.பொன்ராஜ் கலந்துகொண்டார். விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.பத்மாவதி தலைமையுரையாற்றினார். அவர் தம் உரையில், கலாச்சாரப் பண்பாட்டோடு கல்வியைப் போதிக்கும் பத்மபூசண் ஸ்ரீ என்.இராமசுவாமி ஐயர் கல்வி வளாகத்தின் சிறப்புகளையும், மகளிர் கல்வி பேணிய குணாளராம் நிறுவனரின் கல்வித்தொண்டினையும், அறப்பணிச்செம்மல், மனிதநேயப்பண்பாளர், வாழ்நாள் சாதனையாளராம் செயலரின் கல்விச்சேவையையும் எடுத்துரைத்தார். மாணவர்களை நோக்கி உயர்ந்த இலட்சியத்திற்காக கனவு காணுங்கள் என்ற கூறிய மேனாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J.அப்துல்கலாம்யின் ஆலோசகர் அறிவியல் விஞ்ஞானி ஏ.பொன்ராஜ் சீரிய பணிகளையும், சாதனைகளையும் எடுத்துக்கூறி தலைமையுரையாற்றினார்.

சிறப்புவிருந்தினர் தமது சிறப்புரையில், இளைய சமூகத்தினராகிய மாணவியர் தங்கள் வாழ்க்கையில், தாங்கள் கண்ட கனவுகளையும், இலட்சியங்களையும் வென்றெடுக்க வேண்டுமென்றும், நம்பிக்கை, எண்ணம், வார்த்தை, செயல், பழக்கவழக்கம், ஆகியவற்றால் மதிப்பு கூடும் என்றும், அம்மதிப்பு தான் தலைவிதியையே மாற்றியமைக்கக்கூடிய வல்லமையைத் தருமென்றும் கூறினார். அறிவார்ந்த வல்லரசு இந்தியாவை கட்டமைக்க ஆராய்ச்சி தேவையென்றும், தனது தனித்தன்மையினை உணர்ந்தவர்களே வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர் என்பதை, அன்னைத்தெரசா, மேடம் க்யூரி, இந்திராகாந்தி, வனிதாமுத்தையா ஆகியோரின் வாழ்க்கை சாதனைகளின் வாயிலாக சான்று காட்டினார். மேலும் நீர்வழிச்சாலையைச் சாத்தியமாக்கினால் வல்லரசு இந்தியா சாத்தியப்படும் என்பதையும், ‘வேளாண்மையே நாட்டின் முதுகெலும்பு’ என்பதையும் கூறி, 2030-க்குள் எரிசக்தி சுதந்திரம் பெற்ற நாடாக இந்தியா மலர வேண்டுமென்ற அப்துல்கலாம்-ன் கனவினை மாணவர் சமுதாயம் நினைவாக்க வேண்டுமென்று வலியுறுத்தியும் மாணவியரிடையே கருத்தாற்றல் மிக்க சிறப்புரையாற்றினார்.

நிறைவுவிழா சிறப்புரையில், திருச்சிராப்பள்ளி, கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மு.சதிஷ்குமார் மாணவியர் கல்வியின் மீது தீராத பற்றுடன் திகழும்போது எல்லா வளங்களும், நலங்களும் அவர்களை வந்தடையும் என்றும், இயற்கையையும், கலையையும் நேசித்து, அதனைப் பாதுகாத்து, வளர்க்கும் சமூக பொறுப்பு மாணவியரிடத்தில் சிறந்தோங்க வேண்டுமென்றும் கூறி சிறப்புரையாற்றினார்.
நுண்கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மூன்றாம் ஆண்டு இளம்அறிவியல் – கணினிப் பயன்பாட்டியல் பயிலும் மாணவி புவனேஸ்வரி “மிஸ்-எஸ்.ஆர்.சி” போட்டியில் வெற்றிபெற்றார். பல்வகை நுண்கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, வேதியியல்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பு.வளர்மதி வரவேற்புரை வழங்கினார். இறுதியில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஆ.இராஜகுமாரி நன்றி கூறினார்.
