திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் மகா சம்ப்ரோஷணம்.

108 வைண தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலாகும். இக்கோவிலின் உபகோவிலும், சோழ நாட்டு திவ்ய தேசங்களில் 2-வது தலமானதுமான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். திருச்சி உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னன் தர்மவர்மன், தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை வேண்டினார். அப்போது அவருக்கு தாமரைப்பூ மூலம் பெண் குழந்தை கிடைத்தது. அக்குழந்தைக்கு கமலவல்லி என பெயரிட்டார். பருவவயதை அடைந்ததும் ரெங்கநாதருடன் கமலவல்லி ஐக்கியமானார். தனது மகளின் நினைவாக உறையூரில் கமலவல்லி நாச்சியார் கோவிலை கட்டினார்.
ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் எழுந்தருளி நாச்சியாருடன் சேர்த்தி சேவை அளிப்பார். இந்த சேர்த்தி சேவையில் நம்பெருமாள், கமலவல்லி நாச்சியாரை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவது உண்டு. இத்தகைய பிரசித்தி பெற்ற உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வந்தன.
புனித நீர்

கும்பாபிஷேக திருப்பணிகள் முடிவடைந்ததையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. நேற்று அதிகாலை 6 மணிக்கு விஸ்வரூப பூஜை நடந்தது. காலை 6.30 மணி முதல் காலை 8 மணி வரை கும்ப, மண்டல பூஜை, சாந்தி ஹோமம், பிராயச்சித்த ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து யாகசாலை பூஜையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடந்தது.

கோவிலின் ராஜகோபுரம், மூலஸ்தான கோபுரம், திருப்பாணாழ்வார், நம்மாழ்வார், கருடாழ்வார், சேனை முதல்வர், ராமானுஜர் சன்னதிகளின் விமானங்களுக்கு கடங்கள் கொண்டு செல்லப்பட்டு பட்டர்கள் வேத மந்திரங்களை ஓதினர். காலை 8.45 மணிக்கு மேல் மூலஸ்தான கோபுரம், ராஜகோபுரங்கள் உள்பட சன்னதி விமானங்களில் கலசங்களுக்கு புனித நீரை பட்டர்கள் ஊற்றினர். அதன்பின் புனித நீரை பக்தர்கள் மீது தெளித்தனர். மேலும் கலசங்களுக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்தனர். கோபுரங்களில் இருந்தபடி அதனை பக்தர்களை நோக்கி காண்பித்தனர்.

பக்தி கோஷம்
கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்ட போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, நாராயணா… என பக்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் தீபாராதனையை காண்பித்த போது பக்தி பரவசத்துடன் அதனை நோக்கி கைகூப்பி வணங்கினர். கோபுரங்களில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்படுதவற்கு முன்பு வானில் கருடன்கள் வட்டமடித்தன. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்தனர்.
கோவில் கும்பாபிஷேகத்தை காண கோவிலின் மேல் பகுதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கோவிலின் வெளிப்பகுதியில் ராஜகோபுரம் முன்பும், கோவிலை சுற்றியும் பக்தர்கள் திரண்டிருந்தனர். கோவில் அருகே வீடுகளின் உள்ள மாடிகளிலும் பக்தர்கள் நின்று தரிசனம் செய்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
கோபுரத்தில் இருந்து புனித நீரை பக்தர்கள் மீது பட்டர்கள் தெளித்த போது அதனை பெறுவதற்கு பக்தர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றனர். இதனால் ராஜகோபுரம் முன்பு சிறிது தள்ளு-முள்ளு ஏற்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
முன்னதாக கும்பாபிஷேகத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கும்பாபிஷேகம் முடிந்த பின் மதியம் 12.30 மணிக்கு மேல் கோவிலிலுக்குள் மூலஸ்தானம் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்பட திரளான பக்தாக்ள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி உள்பட அறங்காவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
