கட்டாய வசூல் அரசு பள்ளிக்கு எதிராக வீதிக்கு வந்த திருச்சி மாணவ, மாணவிகள் !

0
1 full

கட்டாய வசூல் அரசு பள்ளிக்கு எதிராக வீதிக்கு வந்த திருச்சி மாணவ, மாணவிகள் !

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தவளவீரன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 375 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 200 முதல் 300 ரூபாய் வரையிலும், 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 600 முதல் 900 ரூபாய் வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காத நிலையில், பணம் வசூலித்ததற்கான ரசீதும் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் பள்ளியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் முறையாக இல்லாத நிலையில், இதுபற்றி பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதேபோல் கட்டணம் தொடர்பாக கேட்ட பள்ளி ஆசிரியர் ஒருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2 full

இதையடுத்து, அரசு பள்ளியில் கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், அதற்கான காரணம் கூறாமல் அலட்சியமாக பதில் அளிக்கும் தலைமை ஆசிரியை உள்ளிட்ட 4 பேர் மீது கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அடிப்படை வசதிகள் கேட்டும் 26.08.2019 காலை பள்ளியின் முன்பு மாணவ, மாணவிகள் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவ, மாணவிகளின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சிலரை பள்ளிக்குள் அழைத்துச் சென்று தலைமை ஆசிரியையுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதையடுத்து எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதிகாரிகளிடம் கொண்டு சென்று அதற்கான தீர்வை பெற்றுக் கொள்ளுங்கள். அதற்காக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று போலீசார், பெற்றோரிடம் கூறினர். இதையடுத்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றனர்.

அரசு பள்ளிக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், மாணவ, மாணவிகளிடம் கட்டணம் பெறுவது இனி நடைபெறாமல் இருப்பதுடன், கல்வித்துறை உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை அழைத்து விசாரணை நடத்தி உரிய தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.