திருச்சியில் ஏழைகளுக்கு இலவச டயாலிசிஸ் திட்டம்.

திருச்சி புத்தூரில் க்யூ மெட் மருத்துவமனையில் ஏழைகளுக்காக இலவச டயாலிசிஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், எங்கள் மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்தக்கட்டமாக மருத்துவமனை சார்பில் ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) இலவசமாக ஏழைகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக செயலிழப்பால் ரத்தத்தில் சேரும் கழிவுகளை, சிறுநீர் வழியாக வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும். ஒரு அளவு வரை இதை மருந்து மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.


அதன்பின், ரத்த சுத்திகரிப்பு எனப்படும் டயாலிசிஸ் முறை மூலமே ரத்தத்தில் உள்ள கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்ற முடியும். மனிதன் உயிர்வாழ இது முக்கியமான விஷயமாகும்.
இந்த கட்டத்தைத் தாண்டி விட்டால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ள வேண்டும். அதனால் ஏழைகளுக்கு இலவசமாக இந்த ரத்த சுத்திகரிப்பை மேற்கொள்ள உள்ளோம். அடிப்படை வசதிகள் கொண்ட எந்திரம் மூலம் இந்த சுத்திகரிப்பு செய்யப்படும்.
இந்த அடிப்படை ரத்த சுத்திகரிப்புக்கு வெளியில் உள்ள மருத்துவமனைகளில் 1,500 ரூபாய் செலவாகும். இதை நாங்கள் முற்றிலும் இலவசமாக செய்கிறோம், என்றார்.
