மானிய விலையில் சூரிய சக்தி உலர்ப்பான்கள்

0

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 60 சதவிகித மானியத்தில் சூரிய சக்தி உலர்ப்பான்கள் வழங்கப்படவுள்ளது. சோலார் உலர்த்திகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் அல்லது விவசாய குழுக்கள் வேளாண்மைப் பொறியியல் உபகோட்ட அலுவலகங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு 60 சதவீதம் மானியத்தில் “சூரிய சக்தியில் இயங்கும் உலர்ப்பான்கள்” வழங்கும் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு  வருகின்றது.

பொதுவாக விவசாய விளைபொருட்களை மண்தரையிலோ  அல்லது சாலையில் காய வைத்தால் தரை பகுதியை ஒட்டியுள்ள பகுதியின் நிறம் மங்கியும், மேல் பகுதியில் உள்ள நிறம் வேறு மாதிரியாகவும் இருப்பதால் மொத்த பொருட்களின் தரம் குறைந்து போகிறது. மேலும் காய வைக்கும் பொருளுடன் அந்த இடத்தில் உள்ள கல், மண் மற்றும் தேவையற்ற பிற பொருட்கள் கலந்து மேலும் அவற்றின் தரம் இழக்கிறது.  இதை போக்கும் வகையில் அறுவடை செய்த விவசாய விளைபொருட்களை உலத்துவதற்கு சூரியகூடார உலர்த்தி மூலம் விளைபொருட்களை உலர்த்தினால் விளைபொருட்களின் தரம் கூடுவதொடு மட்டுமல்லாமல் சந்தையில் அதன் மதிப்பும் கூடுகிறது.

‌சந்தா 1

வேளாண் விளைபொருட்களை சோலார் உலர்ப்பான்கள் மூலம் உலர்த்தி, அதனை மதிப்புக்கூட்டும் பொருட்களாக மாற்றி விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறும் வகையில்                வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் தமிழக அரசு சூரிய சக்தியில் இயங்கும் உலர்ப்பான்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது.

சந்தா 2

சோலார் உலர்ப்பான்களில், வெளியிலிருந்து காற்று, தூசு படியாத வகையில் பாலிகார்போனேட் தாள் மூலம் மூடப்பட்டு, தரையில் கான்கிரீட் மற்றும் கடப்பா கற்கள் பதிக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப உட்பகுதியில் வெப்பத்தை நிலைப்படுத்தவும், அதிகமான வெப்பத்தை வெளியேற்றவும் சூரிய சக்தியில் சென்சார் மூலம் இயங்கக்கூடிய 3 மின்விசிறிகள் பொருத்தப்படுகிறது.

இத்தகைய உலர்ப்பான்கள் மூலம் காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி, மிளகாய், வாசனைப்பொருட்கள், மூலிகைப் பொருட்கள் என அனைத்து உணவுப் பொருட்களையும் மிகவும் சுகாதார முறையில் உணவுப் பொருட்களில் உள்ள உயிர்சத்துகள் வீணாகாமல், உலர்த்தலாம்.  பின்னர், அதை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றலாம்.

2019-20 ஆம் ஆண்டில், இப்புதிய திட்டத்தில் உத்தேசமாக 400 சதுர அடிபரப்பளவு உள்ள கூடாரத்தில் சுமார் 1 டன் எடையுள்ள மிளகாய் பழத்தை காய வைத்து கொள்ளலாம். மேலும் செடியில் இருந்து பறித்த மிளகாய் பழங்களை இக்கூடாரத்தில் வைத்தால் 2 நாட்களில் முழுவதும் காய்ந்து விடும் 400 சதுர அடி முதல் 1000 சதுர அடி பரப்பளவில் இக்கூடாரத்தை அமைத்துக் கொள்ளலாம். மேலும் 400 சதுர அடி உள்ள இடத்தில் இந்த சூரிய உலர்த்தி கூடாரத்தை அமைக்க சுமார் ரூ.3.00 லட்சம் வரை செலவு ஏற்படுகிறது.

1000 சதுரஅடியில் இந்த கூடாரத்தை அமைக்க சுமார் ரூ.7லட்சம் வரை செலவாகிறது.  இதில் டிரே இல்லாமலும் அதிக செலவில்லாத பொருட்களை கொண்டு தரை தளத்தினை அமைத்து இக்கூடார அமைப்பின் செலவை குறைத்துக் கொள்ளலாம். இந்த கூடாரத்தை அமைக்க செலவாகும் தொகையில் சிறு குறு மற்றும் ஆதி திராவிடர் பெண் விவசாயிகளுக்கு 60 சதவீத தொகை மானியமாக வழங்கப்படுகிறது.  இதர விசாயிகளுக்கு  50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். அதிக பட்சமாக ரூ.31/2லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

மாவட்டத்திலுள்ள தனிப்பட்ட விவசாயிகள் அல்லது சொசைட்டி விதியின்கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் குழுக்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, வையம்பட்டி மற்றும் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (கைபேசி எண் : 94430 66308) வேளாண்மைப் பொறியியல் துறை, எண் : 2 ஜெயில் கார்னர், திருச்சி – 620 020 அலுவலகத்திலும், முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர்  மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (கைபேசி எண் : 98424 76576) வேளாண்மைப் பொறியியல் துறை, 18H/1A கண்ணதாசன்தெரு, முசிறி – 621 211 அலுவலகத்திலும், இலால்குடி, புள்ளம்பாடி மற்றும் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (கைபேசி எண் : 98424 35242) வேளாண்மைப் பொறியியல் துறை, கணபதி நகர், வடக்கு விஸ்தரிப்பு, தாளக்குடி அஞ்சல், இலால்குடி 621 216 அலுவலகத்திலும் தங்களது பெயரினை பதிவு செய்து மூதுரிமை அடிப்படையில் பெற்று பயன் அடையுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.