திருச்சியில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை

0
Business trichy

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும் திருச்சியில் மழை பெய்யாமல் இருந்தது. நேற்று காலை வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. அதன்பிறகு சிறிது இடைவெளி விட்டு 8.30 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.

மாநகரில் பல்வேறு தெருக்களில் மழை நீர் செல்ல வழியில்லாததால் குளம்போல் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளையும் மழைநீர் சூழ்ந்தது. மேலப்புதூர் சுரங்கப்பாதை பாலத்தில் வழக்கம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பாலக்கரை வழியாக செல்லும் வாகனங்கள் பீமநகர் வழியாக திருப்பி விடப்பட்டன. பலத்த இடியுடன் மழை பெய்ததால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு கட்டிடங்களின் கீழ் ஒதுங்கி நின்றனர். திருச்சி மாநகரில் கண்டோன்மெண்ட், பாலக்கரை, காந்திமார்க்கெட், ஸ்ரீரங்கம், உறையூர், கருமண்டபம் உள்பட பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது.

Kavi furniture
MDMK

இதற்கிடையே திருச்சி உய்யகொண்டான்திருமலை அருகே கொடாப்புரோட்டில் மின்னல் தாக்கியதில் பனைமரம் தீப்பிடித்து எரிந்தது. உடனே அந்த பகுதியினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வாகனத்தில் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதேபோல் உறையூர் காமாட்சி அம்மன்கோவில் தெருவிலும் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. அங்கு மரத்தை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் உடனடியாக அந்த பகுதியினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் பலத்த மழையால் மரத்தில் பிடித்த தீ அணைந்தது. உறையூர், கருமண்டபம், கண்டோன்மெண்ட் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே சாலையோரம் இருந்த 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. உறையூரில் சாலையோரம் நிறுத்தி இருந்த ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. கே.கே.நகர் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்தது. மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டது. மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ்நிலையம், டி.வி.எஸ்.டோல்கேட் உள்பட பல பகுதிகளில் மழையின் காரணமாக வாகனங்கள் மெதுவாக சென்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

– தினத்தந்தி

Pranav city

Leave A Reply

Your email address will not be published.