அறிவோம் தொல்லியல்-23 பயணங்கள் முடிவதில்லை…

0
1

புதுக்கோட்டை தமிழி எழுத்துகள் :

நாம் சென்ற வார தொடர்களில் கி.மு நான்கு தொடங்கி கி.மு மூன்றாம் நூற்றாண்டு வரை காலவரிசையாக கல்வெட்டுகளை கண்டுவருகிறோம். அதன்படி இவ்வாரமும் கி.மு மூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த கல்வெட்டான குடுமியான்மலை கல்வெட்டினை காண்போம்.

புதுக்கோட்டையில் குடுமியான்மலை மற்றும் சித்தன்னவாசலில் தமிழி எழுத்துகள் காணப்படுகிறது!  இதில் சித்தன்னவாசல் எழுத்துகள் கி.மு முதலாம் நூற்றாண்டை சேர்ந்தவை.

புதுக்கோட்டையின் தொன்மை:

புதுக்கோட்டை  மிக நீண்டதொரு வரலாற்றை தன்னகத்தே கொண்டது. பெருங்கற்கால பண்பாட்டு சின்னங்கள் இங்கு அதிகம் உள்ளது.  அக்காலம் தொட்டு, சங்ககாலம், வரலாற்று காலம் என நீண்ட பல வருட வரலாற்றை கொண்ட ஓர் மாவட்டம். அக்காலத்தில் புதுக்கோட்டை ஒல்லையூர் என அழைக்கப்பட்டுள்ளதை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். புதுக்கோட்டை காரையூர் அருகேயுள்ள ஊர் இன்றைய ஒலியமங்கலம். சங்ககால இலக்கியம் காலம் முதலே குறிக்கப்படும் பெருமை வாய்ந்த ஊர்.

புறநூற்றின் 71 ம் பாடலில் இவ்வூரினை குறித்த குறிப்பு வருகிறது! இதில் “ஒல்லையூர் தந்த பூதபாண்டியன்” எனும் பாண்டியனின் சிறப்பை கூறுகிறது. மேலும் அகம், புறம் இரண்டு இலக்கியங்களும் இவ்வூரில் வாழ்ந்த பெருமக்கள் சிலரை கூறுகிறது.

ஒல்லையூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன், இருங்கோள் ஒல்லையான் செங்கண்ணார் முதலியோர் இவ்வூரைச் சேர்ந்த மக்களே!  இன்று மிகவும் சிற்றூராய் விளங்குகிறது. புதுக்கோட்டையிலுள்ள நிறைய கோவில்களில் சோழர், பாண்டியர் கல்வெட்டுகளில் ஒல்லையூர் கூற்றம் என்றே வழங்குகிறது.

ஒலியமங்கலம் வரகுணேஸ்வரர்:

இங்கு 9 கல்வெட்டுகள் உள்ளது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் கால கற்றளி இது. இவ்வூர் கல்வெட்டில் ஒல்லையூர் கூற்றத்து, ஒல்லையூர் மங்கலத்து இறைவன் வரகுணேஷீவரர் என அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் தானம், கொடுத்த கல்வெட்டும், இறைவன் திருமேனிக்கு செய்யும் பூஜைக்கு விட்ட நிவந்தமான ஊர், அதன் அளவீடுகள் காணப்படுகிறது!

குலசேகரபாண்டியனின் கல்வெட்டுகள் 4 காணப்படுகிறது. ஒல்லையூர் மங்கலம் என்ற சங்ககால ஊரே இன்று மருவி ஒலியமங்கலம் என அழைக்கப்படுகிறது. பூலாங்குறிச்சி களப்பிரர் கல்வெட்டில் ஒல்லையூர் கூற்றம், முத்தூர் கூற்றம் என வழங்கப்படுகிறது.  இவ்வாறு புதுக்கோட்டையின் தொன்மையினை நாம் உணரலாம்.

2

குடுமியான்மலை தமிழி:

புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இங்கேயுள்ள 7 ம் நூற்றாண்டு குடைவரை கோவில் மிகவும் புகழ்பெற்றது. தற்சமயம் இங்கு பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இம்மலையின் தென்மேற்கு பாறைச்சரிவில் இயற்கையான குகைத்தளம் அமைந்துள்ளது. இங்கே  1991 ம் ஆண்டு முனைவர். சொ.சாந்தலிங்கம் குழுவினரால் கி.மு.3ம் நூற்றாண்டைச்சார்ந்த தமிழிக் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது.

கல்வெட்டு:

“நாழள் கொற்றந்தய் ப(ளி)ய்

விளக்கம்:

நாழள் என்ற ஊரினைச் சேர்ந்த கொற்றந்தை என்பவரால் ஏற்ப்படுத்தப்பட்ட பள்ளி என இக்கல்வெட்டை பொருள் காணலாம். இதில் நாழள் என்பது சங்ககால குறிஞ்சிப்பாட்டில் வரும் ஞாழள் என்ற மலரின் பெயரால் அமைந்த ஊராய் கொள்ளலாம். ‘‘புலிநகக் கொன்றை” என்று தற்காலத்தில் கூறப்பெறும் இம்மலர்.  கடற்கரையில் மிகுதியாக மலர்ந்திருக்கும். பெரும்பான்மை இடங்களில் புன்னையையும் ஞாழலையும் சேர்த்தே வழங்குவர். இளவேனிற் காலத்தில் மலரும் இம்மலர் பொன்னிற வண்ணத்தை உடையது. இது மகளிர் மேல் படரும் சுணங்கிற்கு உவமையாகக் கூறப்பெறுகிறது.

இதனை‘‘ஞாழற் பூவின் அன்ன சுணங்கு” (ஐ-149) என்ற பாடலடி புலப்படுத்தும். ஞாழல் மலர் மிகச் சிறியதாகச் சிறுவெண் கடுகினைப் போலவும் ஆரல் மீனின் முட்டையைப் போலவும் இருப்பதாகக் கூறுவர். ஞாழல் மரத்தின் மலர்கள் கடற்கரையின் மணல்மேட்டில் பரவிக் கிடக்கின்றன என்பது அதன் பொருள். இவ்வாறு சிறப்பினை உடைய சங்ககால மலரின் பெயரால் அமைந்த ஊராய் இக்கல்வெட்டில் வரும் நாழள் என்ற பெயரை குறிப்பிடலாம்.

இக்கல்வெட்டில் ள், ந் போன்ற எழுத்துகள் புள்ளியுடன் உள்ளது. அந்தை என்பது மரியாதையாய் விளிக்கும் சொல் ஆகவே கொற்றந்தை இங்கு மரியாதைக்குரியவராய் காட்டப்படுகாறார். இவ்வாறு சிறப்புடைய இக்கல்வெட்டின் இன்றைய நிலை தற்போது மிகவும் பரிதாபமாய் உள்ளது. தற்கால மதுபானப்பிரியர்களின் புகலிடமாய் இவ்விடம் உள்ளது வருந்தத்தக்கது, மதுபான புட்டிகள், உடைந்த கண்ணாடிதுண்டுகள், குப்பைகள், தற்காலத்திய கல்வெட்டுகள்( தமிழி கல்வெட்டின்னருகேயே தங்களின் காதலன், காதலி பெயரை ஆங்கிலத்தில் கிறுக்கியுள்ளனர்) இத்தகைய இன்னல்களை தாண்டிதான் அடையாளம் காணவேண்டியுள்ளது. கைகளில் குறிப்புகள் வைத்துக் கொண்டு தேடுவதே நமக்கு இவ்வளவு சிரமமாய் உள்ளதெனில், முதன்முதலில் இங்கு கல்வெட்டினை கண்டறிந்த முனைவர். சாந்தலிங்கம் அணியினர் அடைந்த இன்னல்கள் எவ்வளவு பெரிதென எண்ண தோன்றுகிறது.

 

தமிழகத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகளை  கண்டோம் இனி வரும் வாரங்களில் கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளை காண்போம்.

 

 புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படும் தமிழி எழுத்துக்கள்…
3

Leave A Reply

Your email address will not be published.