பாம்பாட்டிச் சித்தர்(பதினெண் சித்தர்கள்….17)

0
gif 1

பாம்பாட்டிச் சித்தர் திருக்கோகர்ணத்தைச் சேர்ந்தவர்.(மத்திய அரசு வெளியிட்டுள்ள நா.கதிரைவேல் பிள்ளையின் தமிழ் மொழி அகராதிச் செய்தி) இவர் பாம்பு பிடிப்பதையே தொழிலாகக்கொண்ட ஜோகி இனத்தில் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.

இவர் சிறுவனாய் இருந்தபோதே மலைப்பகுதியிலிருந்த கொடிய நச்சுப்பாம்புகளையெல்லாம் பிடித்து ஆட்டியவர். இவரது ஆற்றலை அறிந்த சித்த மருத்துவர்கள் நால்வர் இவரிடம் வந்து, மருந்து தயாரிக்க நவரத்தின பாம்பொன்றைப் பிடித்துத்தர வேண்டும் என்று கேட்டனர்.(நவரத்தின பாம்பு என்பது ஒரு முறை கூட நஞ்சை வெளிப்படுத்தாது நீண்டகாலம் வாழ்ந்து முடித்த நாகம். கடைசிகாலத்தில் அதன் உடலே குறுகி மிகவும் குட்டையாகி இருக்கும். அதன் நஞ்சுமுழுவதும் அதன் தலைபாகத்தில் கட்டுப்பட்டு ஒளி மிக்க மாணிக்கமாக மாறியிருக்கும். அந்த நாகம் இரைதேட நடு இரவில் தான் வெளிவரும். தன் தலையில் உள்ள மாணிக்கத்தைக் கக்கி அதன் ஒளியில் தான் இரைதேடும்(வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சர்யம் காத்துக் தம் விந்தைக் கட்டி மூலாதாரத்தில் உள்ள குண்டலினிசக்தியை சகஸ்ரதளத்திற்குக் கொண்டு சென்று நிறுத்தி தம் புருவமையத்தில் உள்ள மனோன்மணி பீடத்தில் தம் ஆன்ம ஒளியைக் கண்டவண்ணம் ஜீவசமாதியில் ஆழ்ந்திருக்கும் மகாசித்தர்களை ஒத்தது இந்த நவரத்தினப் பாம்பு)

பாம்பாட்டிச் சித்தர் நவரத்தினப் பாம்பைப்பிடிக்க மலைக்காடுகளிலெல்லாம் அலைந்து திரிந்து அன்று நடு இரவில் அதன் புற்றையும் கண்டுபிடித்துவிட்டார்.

gif 3

‘புற்றருகில் சென்று மல்லோ சித்தர்தாமும்

புனித முள்ள நவரத்தின பாம்புதன்னை

வெற்றியுடன் தான்பிடக்கப் போகும்போது

வேதாந்தச் சட்டைமுனி அங்கிருந்தார்’

                     (போகர் சத்தகாண்டம் 7000 பாடல் 3577)

gif 4

சட்டை முனியின் ஒளிவீசும் ஞானதேகத்தைப் பார்த்த  மாத்திரத்தில் பாம்பாட்டியின் மன இருள் அகன்றது. சட்டைமுனி அவரைப் பார்த்து, ‘மகனே! புறவுலகில் உலவும் பாம்புகளை அடக்கவல்ல நீ உன்னுள் மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் வாலைப்பாம்பைத் தட்டி எழுப்பப் பிறந்தவன். இந்தப் புற்றில் உள்ள நவரத்தினப் பாம்பைவிட உன்னுள் உள்ள குண்டலினிப் பாம்பு ஆயிரம் மடங்கு ஒளிமிக்கது. உன் ஞானக்கண்ணைத் திறந்து உனக்கு ஆன்ம வழிகாட்டக் கூடியது என்று கூறி அவனுக்குக் குண்டலினி தீட்சையும் அளித்தார். அந்த நொடியே தவத்தில் இறங்கிய பாம்பாட்டிச்சித்தர் கொஞ்சகாலத்திலேயே அஷ்ட மாசித்திகளையும் பெற்று மகாசித்தரானார். பிறகு ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து கொண்டு சித்துக்கள் புரிந்து மக்களை மகிழ்வித்ததோடு மக்களின் பிணிகளையும் போக்கி வந்தார்.

செல்லும் வழியில் ஒருகுறுநாட்டு மன்னன் இறந்து கிடந்ததைக் கண்டார். அவனைச்சுற்றி அரசியும் மற்றவர்களும் அழுது கொண்டிருந்தனர். அருள் உள்ளம் கொண்ட அந்த இளம் சித்தர் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காக தன் கல்பதேகத்தை ஓரிடத்தில் பத்திரமாக ஒளித்து வைத்துவிட்டு சூக்கும சரீரத்துடன் ஒரு செத்தபாம்பை எடுத்துக்கொண்டு அரண்மனைக்குள் வந்து அந்தப்பாம்பை மன்னன் மேல் வீசி எறிந்தார். மன்னனின் உடலின்மேல் பாம்பு விழுந்ததைக் கண்ட அனைவரும் பயந்து அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டனர். அரசிமட்டும் அசையாமல் அரசன் உடலின் அருகிலேயே இருந்தாள்.

அடுத்த நொடியில் பாம்பாட்டிச்சித்தர் அந்த அரசன் உடலில் புகுந்து மன்னனாக விழித்தெழுந்தார். அதே சமயத்தில் இறந்த மன்னனுடைய ஆன்மா பரகாப்பிரவேசமுறையில் இறந்து கிடந்த பாம்பின் உடலில் புகுந்து வெளியே ஓடத் தொடங்கியது. அந்த ஆன்மா மன்னனாக வாழ்ந்த போது முறைதவறிய சிற்றின்பத்தில் அளவுக்கு மீறி ஈடுபட்டு அதனாலேயே உடல் கெட்டு நோய்வாய்ப்பட்டு இறக்க நேர்ந்தது. அப்போது மன்னன் உடலிலிருந்த சித்தர் அந்த பாம்பைப் பார்த்து ‘மன்னா! இன்னும் உன் ஆசைகள் அடங்கவில்லையா? என்று கேட்க அந்த பாம்பும் சித்தருக்கு அடங்கி படமெடுத்து ஆடிக்கொண்டு நின்றது. சித்தர் அந்தப் பாம்பைப் பார்த்து “ஆடு பாம்பே” என்று முடியும் 129 பாடல்கள் அடங்கிய ஒரு சதகத்தைப் பாடி முடித்தார்.

அந்த சதகம் 1. கடவுள் வணக்கம், 2. குரு வணக்கம், 3. பாம்பின் சிறப்பு, 4. சித்தர் வல்லபம், 5. சித்தர் சம்வாதம், 6. பொருளாசை விலக்கல், 7. பெண்ணாசை விலக்கல், 8.அகப்பற்று நீக்குதல் என்னும் எட்டு தலைப்புகளில் எளிய தமிழிலில் பாமரரும் புரிந்து கொண்டு ஞான மார்க்கத்தில் சென்று சித்தி அடையும் வண்ணம் அமைந்துள்ளது. பாம்பாட்டிச்சித்தர் இந்த ஞான நூலைப் பாடி முடித்துவிட்டு அரசன் உடலை விட்டு வெளியேறித் தன் கல்ப உடலில் புகுந்து தம் சித்தர் வாழ்க்கையைத் தொடங்கினார்.

தன்னை யாரென்று வெளிக்காட்டிக் கொள்ளாமல் மக்கள் பிணி தீர்த்துக்கொண்டும், அவர்களுக்கு அறநெறிகளைப் புரிய வைத்துக்கொண்டும் ஊர் ஊராகச் சென்றார். விருத்தாச்சலம் சென்றவுடன் தான் பூதவுடலை பிரியும் நேரம் வந்ததை உணர்ந்து அங்கு கோவில் கொண்டுள்ள பழமலைநாதருடன் ஐக்கியமானார் என்று பண்டைய சித்த மருத்துவ ஆய்வு நூல்கள் கூறுகின்றன. இவர் திருஞானம் என்ற இடத்தில் சமாதி பூண்டுள்ளார் என்றும், மருதமலையில் ஜீவசமாதி அடைந்துள்ளார் என்றும், பல நூல்கள் கூறுகின்றன. மருதமலையில் முருகன் சன்னதிக்கு அருகிலேயே பாம்பாட்டிச்சித்தர் குகை என்று ஒரு குகைக்கோவில் உள்ளது.

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.