உடல் உறுப்பு தானம் கேட்டு மொத்தம் 5, 798 பேர் காத்திருப்பு

0
Full Page

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் இருந்தாலும் பட்டியலில் உள்ளனர்.

மருத்துவத் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் இன்றைய சூழலில் உடல் உறுப்பு தானம் அதிகரித்து, இருக்கும் வரை ரத்த தானம், இறந்த பின் உறுப்பு தானம், என்ற உணர்வு மேலோங்கி வருகிறது.

உலக உடல் உறுப்பு தான தினம் ஆக. 13 ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதையொட்டி இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் திருச்சியைச் சேர்ந்த இதய சிகிச்சை நிபுணரும், உறுப்பு தானத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சாதனை படைத்தவருமான டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி கூறியது:

நம் உடலில் உள்ள குறிப்பிட்ட சில உறுப்புகளை உயிருடன் இருக்கும்போதோ, இறந்த பிறகோ பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சில சட்டங்கள், விதிகளுக்குட்பட்டு தானமாக வழங்கலாம்.

பொதுவாக உறுப்பு தானத்தை வாழும்போது, இறப்புக்குப் பின், மூளைச்சாவு அடைந்த பின் என 3 வகைகளாகப் பிரிக்கலாம். ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரது 2 சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, எலும்பு மஜ்ஜை போன்றவற்றை தானமாக வழங்கலாம். தானத்துக்குப் பின் உடல் ஆரோக்கியம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.

இரண்டாவதாக ஒருவர் இறந்தபின் அவரது கண் விழித்திரை, எலும்பு மஜ்ஜை, தோல், இதய வால்வுகள் போன்றவற்றையும், மூன்றாவதாக மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கணையம், எலும்பு மஜ்ஜை, கண், தமணிகள் போன்றவற்றையும் தானமாகப் பெறலாம். ஒருவரின் உறுப்புகளைக் கொண்டு 15 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.

உடல் உறுப்பு தானம் குறித்து பதிவு : உறுப்புதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் என்ற தமிழக அரசின் இணையதள முகவரியில் தங்களைப் பற்றியும், எந்தெந்த உறுப்புகளை தானமாக கொடுக்க விருப்பம் போன்ற விவரங்களையும் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டையையும் பதிவிறக்கலாம். அருகிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அல்லது சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் பதியலாம்.

உடல் உறுப்பு தானம் செய்த பின் அதுகுறித்த விவரத்தை குடும்பத்தில் உள்ள ஒருவரிடம் தெரிவிக்க வேண்டும். இதில் பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தானம் செய்தவர் இறந்தாலோ அல்லது மூளைச்சாவு அடைந்தாலோ அவரது குடும்ப உறுப்பினர்களின் அனுமதியுடன்தான் உறுப்புகள் தானம் பெறப்படும்.  அதேபோல, உறுப்புகளைத் தானம் பெற விரும்புவோரும் பதிவது அவசியம். உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு தகுதியான அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் பதிவு செய்து கொள்வோர், தங்களது பதிவு முன்னுரிமை வரிசை அடிப்படையில் உறுப்புகளைத் தானமாகப் பெற முடியும்.

மூளைச்சாவு-உறுதி செய்வது எவ்வாறு ?: ஒருவர் விபத்திலோ அல்லது கடுமையாக உடல் நலம் பாதிக்கப்படும்போதோ மூளைச்சாவு அடைய நேரிடுகிறது. அதாவது அவரது உடல் உறுப்புகள் நன்றாக இருக்கும். அதேசமயம், அவரின் இதயம் துடித்தாலும் சுயமாக மூச்சுவிட முடியாது.

Half page

வெண்டிலேட்டர் மூலம் மட்டுமே சுவாசம் இருக்கும். அதை எடுத்தவுடன் ஒரு சில மணி நேரத்தில் அவர் நிச்சயம் இறந்துவிடுவார் என உறுதி செய்யப்பட்டால்தான் அவர் மூளைச்சாவு அடைந்தவராக அறிவிக்கப்படுகிறார். ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை, மருத்துவமனையில் இருக்கும் ஒரு மருத்துவர் மட்டும் அறிவித்துவிட முடியாது. நரம்பியல் நிபுணர், நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர், இதய சிகிச்சை நிபுணர் ஆகியோர் அடங்கிய குழுவினர் பரிசோதித்த பின்னரே மூளைச்சாவு குறித்து உறுதி செய்யமுடியும்.

அதுகுறித்து உறவினர்களிடம் விளக்கி, குடும்பத்தினரிடம் சம்மதம் பெற்ற பின்னரே உறுப்புகளைத் தானமாக பெற முடியும்.

உறுப்பு கிடைக்காததால் உயரும் பலி எண்ணிக்கை:

நோய்கள் மற்றும் செயல்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவைப் பொருத்தமட்டில், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்காக சுமார் 1.50 லட்சம் சிறுநீரகங்கள் தேவைப்படும் வேளையில் வெறும் 3,000 சிறுநீரகங்கள் மட்டுமே தானமாகக் கிடைக்கின்றன.

மாற்று அறுவைச் சிகிச்சைக்கு 25 ஆயிரம் பேருக்கு கல்லீரல் தேவைப்படும் நிலையில் 800 பேருக்கு மட்டுமே கிடைக்கிறது. 90 சதவீதம் பேர் தேவையான உறுப்புகள் கிடைக்காமலேயே உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் :

உறுப்பு தானத்தில் உலகளவில் ஸ்பெயின் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் தமிழகம் கடந்த பல ஆண்டுகளாக முன்னிலை வகித்து வருகிறது.

சிறுநீரகத்துக்காக 5,253 பேர் காத்திருப்பு

இருப்பினும் தமிழகத்தில் கடந்த ஆக.2-வரை சிறுநீரகத்துக்காக (கிட்னி) 5,253 பேர், கல்லீரலுக்காக 453 பேர், இதயத்துக்காக 50 பேர், நுரையீரலுக்காக 37 பேர், கணையத்துக்காக 5 பேர் என மொத்தம் 5, 798 பேர் உடல் உறுப்பு தானம் பெற பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

நல்ல ஆரோக்கியமாக உள்ளோர் அனைவரும் உறுப்பு தானம் செய்யத் தகுதியானவர்கள். ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோரிடமிருந்து உறுப்புகளைத் தானம் பெற முடியாது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.