திருச்சியில் தனி தாசில்தாரின் பொருட்களை ‘ஜப்தி’ செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்

0

திருச்சியை சேர்ந்தவர் நடேசம்பிள்ளை. திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பகுதி பூலாங்குடியில் இவருக்கு சொந்தமான 3.90 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை கடந்த 1994-ம் ஆண்டு கையகப்படுத்தியது. வீடற்ற ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த ஏழைகளுக்கு வழங்குவதற்காக இந்த நடவடிக்கையை தமிழக அரசின் உத்தரவுபடி ஆதிதிராவிடர் நலத்துறை எடுத்து இருந்தது.

தனக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும், எனவே கூடுதல் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரி நடேசம்பிள்ளை திருச்சி சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு நிலுவையில் இருந்த கால கட்டத்தில் நடேசம்பிள்ளை இறந்து விட்டதால் வாரிசு அடிப்படையில் அவரது மகன் தியாகலிங்கம் பொறுப்பேற்று வழக்கை தொடர்ந்து நடத்தினார். இதில் ஆதிதிராவிடர் நலத்துறை நில உரிமையாளருக்கு சதுர அடிக்கு ரூ.17 என நிர்ணயம் செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டில் சதுர அடிக்கு ரூ.9 என நிர்ணயம் செய்யும்படி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தியாகலிங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். சுப்ரீம் கோர்ட்டு சதுர அடிக்கு ரூ.11 என நிர்ணயம் செய்து இழப்பீடு வழங்க உத்தர விட்டது.

food

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை தனக்கு வழங்கவேண்டிய ரூ.58 லட்சத்து 21 ஆயிரத்து 594 இழப்பீடு தொகையை வட்டியுடன் வழங்காததால் தியாகலிங்கம் திருச்சி கோர்ட்டில் ஒரு நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கில் கோர்ட்டு ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாரின் கார், இரும்பு மற்றும் மர பீரோ, மர மேஜை, நாற்காலிகள், தட்டச்சு எந்திரம் உள்ளிட்ட அசையும் பொருட்களை ‘ஜப்தி’ செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுடன் கோர்ட்டு ஊழியர் (அமீனா) நேற்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் தியாகலிங்கமும் வந்து இருந்தார். அப்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததால் தனி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று ‘ஜப்தி’ செய்ய வந்த விவரத்தை கோர்ட்டு ஊழியர் எடுத்து கூறினார்.

அப்போது தனி தாசில்தார் தமிழ்கனி, மாவட்ட குற்றவியல் மேலாளர் ஷோபா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஏற்கனவே 3 தவணைகளாக இழப்பீடு தொகை ‘டெபாசிட்’ செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வழக்கு வருகிற 9-8-2019 அன்று (நாளை) விசாரணைக்கு வர இருக்கிறது. அந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில் ஜப்தி நடவடிக்கை தேவை இல்லை என்று விளக்கம் அளித்தனர்.

ஆனால் இதனை கோர்ட்டு ஊழியரும், தியாகலிங்கமும் ஏற்கவில்லை. மாலை 4 மணி வரை அவர்கள் அந்த அலுவலகத்திலேயே அமர்ந்து இருந்தனர். கோர்ட்டில் இருந்து உரிய தகவல் வந்த பின்னர் தான் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். நில உரிமையாளருடன் கோர்ட்டு ஊழியர் ஜப்தி நடவடிக்கைக்காக வந்தது திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.