எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக வருகின்ற 9ம் தேதி அன்று இந்தியா  முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம்

0
Business trichy

SDPI கட்சியின் மாநில செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் கடந்த 7ம் தேதி திருச்சியில் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. மேலும் மாநில பொதுசெயலாளர்கள் நிஜாம் மைதீன், அப்துல் ஹமீது, அ.ச. உமர்பாரூக் , செயலாளர்கள் அமீர் ஹம்சா , நவவீ , பொருளாளர் கோவை அபுதாஹீர் , மற்றும் தொழிற்சங்க மாநில தலைவர் பாரூக் , செயற்குழு உறுப்பினர் சபியுல்லா , திருச்சி மாவட்ட தலைவர் ஹஸ்ஸான், பொதுசெயலாளர் நியமத்துல்லா  முன்னிலை வகித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.டிபி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசியதாவது;

மத்தியில் பெரும்பான்மை மிருக பலத்துடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு, அதிகார வெறியுடன் மக்களவையில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்து, அதிவிரைவாக பல சட்டங்களை இயற்றி வருகின்றது. பெரும்பான்மை மமதையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை ஏற்காமல், இதுவரை இல்லாத வகையில் 30 சட்டமசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.

loan point

கூட்டாட்சி மற்றும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறும் என்.ஐ.ஏ. திருத்தச் சட்டம், அடிப்படை உரிமைகளை பறிக்கும் யுஏபிஏ சட்டத் திருத்தம், அதேபோல அரசின் திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் ஆர்.டி.ஐ சட்டத்தில் திருத்தம், சிறுபான்மை மக்களின் சிவில் பிரிச்சினையை கிரிமினல் குற்றமாக்கும் முத்தலாக் சட்டம் உள்ளிட்டவைகளுடன் காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சியை பறிக்கும் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை நீக்கம் செய்ததோடு, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிந்து யூனியன் பிரதேசமாகவும் மாற்றியுள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் எதிர் நோக்கி இருக்கும் இருண்ட காலத்தை பறைசாற்றுவதாக உள்ளது. மக்களைப் பற்றி சிந்திக்காத, மக்களின் உணர்வுகளை மதிக்காத, பெரும்பான்மைவாத மனப்போக்குடன் செயல்பட்டுவரும் மத்திய பாஜக அரசின் இத்தகைய ஜனநாயக விரோத போக்கினை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

nammalvar

காஷ்மீரைப் பொறுத்தவரை, அம்மாநில மக்களின் உரிமைகளை நசுக்கும் வகையில், இந்திய அரசியல் அமைப்பின் சட்டப் பிரிவுகளான 370 மற்றும் 35A ஆகியவற்றை ரத்து செய்து ஏதேச்சதிகார போக்கில் திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு.

இந்திய அரசுக்கும், காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்கிற்கும் இடையே கையெழுத்தான 1947 இணைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படை ஷரத்தாக 370 விளங்குகிறது. இந்தியா குடியரசாக உருவானதில் இருந்து காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு உரிமைகளான, ஷரத்துகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை காஷ்மீர் மாநில சட்டமன்ற ஒப்புதல் இல்லாமல் நீக்க முடியாது. ஆனால், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் முடிவை, அம்மாநில சட்டமன்றத்தை முடக்கி வைத்து, பல்லாயிரக்கணக்கான ராணுவப் படைகளை நிறுத்தி, அரசியல் தலைவர்களை சிறைவைத்து, தொலைதொடர்புகளை துண்டித்து, மிக ரகசியமாக அறிவிப்புகளை வெளியிட்டு, நாடாளுமன்றத்தில் போதிய அளவு விவாதம் கூட இல்லாமல் நிறைவேற்றியிருப்பதன் மூலம், மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவால் வழங்கப்பட்ட அந்த ஷரத்தை, காஷ்மீர் மாநில சட்டமன்ற ஒப்புதல் இன்றி நீக்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. அது இந்திய அரசியல் சட்டத்தின் நிரந்தரக் கூறு ஆகும். ஷரத்து 370, மத்திய அரசுக்கும், காஷ்மீர் மாகாணத்திற்கிடையேயும் உறவுகளை முறைப்படுத்தும் வழிமுறையாக விளங்கியது. நாட்டின் உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பலமுறை 370 ஷரத்தை அரசியல் சட்டத்தின் நிரந்தரக் கூறுகளாக நிலைநிறுத்தியுள்ளன.

web designer

காஷ்மீர் விவகாரத்தில் இந்துத்துவ சக்திகளை திருப்திப்படுத்தும் போக்கை கடைபிடித்து வரும் பாஜக அரசு, இந்த விவகாரத்தை நாடாளுமன்ற தொடரின் ஆரம்பத்திலேயே விவாதமாக மேற்கொள்ளாமல், கடைசி நேரத்தில் யாருடைய கருத்துக்களுக்கும் செவிசாய்க்காமல், ஜனாதிபதியின் உத்தரவின் மூலம் காஷ்மீர் மாநிலத்தின் உரிமைகளை பறித்துள்ளது.

இதன்மூலம், ராணுவ குவிப்பு, 144 தடை உத்தரவு, தொலைத்தொடர்புகள் துண்டிப்பு, அரசியல் தலைவர்கள் சிறைவைப்பு போன்ற ஆபத்தான மற்றும் உணர்வுப்பூர்வமற்ற மோசமான செயலால், மாநில மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கமுடியும் என்ற செய்தியை உள்துறை அமைச்சரின் நடவடிக்கைகள் முன்னறிவிப்பு செய்கிறது. கூட்டாட்சி முறையின் இந்த வீழ்ச்சி இனி எந்த மாநிலத்தையும் தாக்கலாம். கலந்துரையாடல், விவாதம், ஒப்புதல் என எதுவும் இல்லாமல் எதிர்காலத்தில் இது போன்ற அடிப்படை மாற்றங்கள் பிற மாநிலங்களிலும் கொண்டுவரப்படலாம் என்ற அச்சம் எழுத்துள்ளது.

பல ஆயிரம் மக்களின் உயிர்களைப் பலிவாங்கிய காஷ்மீர் பள்ளத்தாக்கு பிரச்சனையை, இத்தகைய அபாயகரமான பலத்தைப் பிரயோகித்து தீர்த்துவிடலாம் என்று அரசு கருதுகிறது. ஆனால், பாஜக அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையாக உருவெடுக்கும்.

அரசியல் சாசனத்தின் ஷரத்து 370ன் கீழ் சிறப்பு அந்தஸ்தை பெறும் ஒரே மாநிலம் காஷ்மீர் மட்டுமல்ல. ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களுக்கு தனி அந்தஸ்து சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. அரசியல் சட்ட ஷரத்து 371A நாகாலாந்து மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தடுக்கிறது. எந்த இந்தியக் குடிமகனும் பல வடகிழக்கு மாநிலங்களில் இடத்தை வாங்கமுடியாது. ஆனால், நவீன தேசியவாதிகள் அரசியல் ஆதாயம் கருதி காஷ்மீரைப் போன்று அந்த மாநிலச் சட்டங்களில் கைவைக்க மாட்டார்கள். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் துயரம் நிறைந்த இந்த மாற்றம் சங்பரிவாரின் வெறுப்பு சித்தாந்தத்தில் தாக்கம் பெற்ற வகுப்புவாத வெறி கும்பலை திருப்திப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே, இந்தியாவை அச்சமூட்டும் பெரும்பான்மைவாத நாடாக மாற்றும் சதியை முறியடிக்க, அனைத்து முற்போக்கு, மதச்சார்பற்ற, ஜனநாயகச் சக்திகள் ஒன்றிணைந்து, இத்தகைய பாசிச நடவடிக்கைகளைக் கண்டித்து போராட முன்வரவேண்டும்.

பாஜக அரசின் என்.ஐ.ஏ. திருத்தம் உள்பட காஷ்மீர் சுயாட்சி உரிமை பறிப்பு வரை, அனைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் தமிழகத்தை ஆளும் அதிமுக ஆதரவளித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜக அரசு மேற்கொண்ட இந்த திருத்த மசோதாக்கள் மீது எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், குறைந்தபட்ச திருத்தக் கோரிக்கையை கூட முன்வைக்காமல் முழுமையாக அதிமுக ஆதரித்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் தமிழகத்தின் உரிமைகளை ஆளும் அதிமுக அரசு கொஞ்சம் கொஞ்சமாக தாரை வார்த்து வருகின்றது. அதிமுகவின் இந்த போக்கு கண்டனத்திற்குரியது.

மத்திய பாஜக அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து, எதிர்வரும் ஆக. 9 அன்று, இந்தியா  முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம் நடத்தவிருக்கின்றது. சென்னையில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டும், மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும் போராட்டத்தை நடத்தவிருக்கின்றது. நாளுக்கு நாள் குறைந்து வரும் நாட்டின் ஜனநாயக மற்றும் மதச்சார்பின்மையின் மாண்புகளை பாதுகாத்திட, அனைத்து தரப்பு மக்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அழைக்கின்றோம் என்றார்.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.