ஒலிம்பிக்ல மெடல் அடிக்கணும்!-திருச்சி வீரர் டொனால்ட்

0
1

தேசிய அளவில் நடைபெற்ற `KHELO INDIA 2019′ விளையாட்டுப் போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்வீரர் டொனால்ட் மும்முனை தாண்டுதல் (Tripple jump) போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் உள்ள டால்மியா மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் டொனால்ட், இந்தாண்டு புனேவில் நடந்த KHELO INDIA 2019 போட்டிக்குச் சென்ற தமிழக அணியில் இடம்பிடித்திருந்தார். புனேவில் நடைபெற்ற போட்டியில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் இவர் கலந்துகொண்டார். இதில் 14.60 மீட்டர் தாண்டி தேசிய அளவில் இரண்டாம் பிடித்துள்ளார்.
வெற்றி பெற்ற டொனால்ட் மகிழ்ச்சியும் பேசும் போது… “சொந்த ஊர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி. அப்பா அரிசிக்கடை வச்சிருக்காரு. அம்மா வீட்ல தான் இருக்காங்க. நானும் அக்காவும் தான் வீட்ல.
நான் 6-வது படிக்கும் போது முதன் முதலாக பள்ளி விளையாட்டுப் போட்டியில கலந்துக்கிட்டேன். பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் மாடசாமி சார்தான் `நீ நல்லா ஓடுற’ன்னு ஊக்கம் கொடுத்தார். அதன்பின்னர் பள்ளி சார்பில் Zonal, மாவட்டம் அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றேன்.
அப்போதே மாவட்ட அளவில் தனிநபர் சாம்பியன்ஷிப் (Individual Championship) வாங்கி இருக்கேன். அப்போது 100, 200 மீட்டர், நீளம்தாண்டுதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்றேன்.
ஆரம்பத்துல யார்கிட்டயும் பயிற்சி எடுக்கல. உடற்கல்வி இயக்குநர் வழிகாட்டுதல்ல தான் நான் இந்தப்போட்டியில் விளையாடினேன். 10-ம் வகுப்புக்குப் பிறகு ராமச்சந்திரன் என்பவரிடம் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். அவர் ரயில்வேயில வேலைபார்க்கிறார். வார இறுதிநாள்களில் எனக்குப் பயிற்சி கொடுப்பார்.
இதற்காக நான் லால்குடி செல்ல வேண்டியிருக்கும். அவர்கிட்ட தான் சில நுணுக்கங்களை கத்துக்கிட்டேன். என்ன மாதிரி நிறைய பசங்களுக்கு கோச் பண்ணுறாரு.Khelo India போட்டிக்கு முன்பாக நான் பள்ளி அளவிலான மாநில விளையாட்டுப் போட்டியில் மும்முனைத் தாண்டுதலில் கலந்துக்கிட்டேன். அந்தப்போட்டியில் 14.42 மீட்டர் தாண்டினேன். அதுல 2வது இடம்தான் வந்தேன்.
ஊர்ல நாங்க பயிற்சி எடுக்கிறது மண் தரையில தான். நேஷனல் மீட்ல சிந்தடிக்தான் இருக்கும் அதுல பழகுறதுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். தமிழ்நாடு சார்பில் கலந்துக்கிட்டு நேஷனல்ல மெடல் அடிச்சது சந்தோஷம்தான். வீட்ல ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.
12வது முடியப்போகுது அடுத்து காலேஜ் போகணும். 2 மாசத்துக்கு ஸ்போர்ட்ஸ் மூட்டைக்கட்டி வச்சுட்டு எக்ஸாமுக்கு படிக்கணும். அப்போதான் காலேஜ்-ல சேர முடியும். காலேஜ்ல மறுபடியும் ஸ்போர்ட்ஸ்தான். நேஷனல், ஒலிம்பிக்னு மெடல் அடிக்கணும். எனக்கு சப்போர்ட்டிவா இருக்கும் என் குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி’’ என்றார்.
பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் மாடசாமி பேசுகையில், “டொனால்ட் ரொம்ப கெட்டிக்கார பையன் சொன்னத டக்குனு புரிஞ்சுக்குவான். நாம அவன் கிட்ட ஒன்னு சொன்னா அத கரெக்டா ஃபாலோ பண்ணுவான்.
இப்போ அவன் ஓன் இன்ட்ரெஸ்ட்- ல தான் லால்குடி வரைக்கும் போய் கோச்சிங் எடுத்துக்கிட்டு வர்றான்.. அவன் 6வது படிக்கும் போதே பையன் கிட்ட நல்ல டேலன்ட் இருக்குனு தெரிஞ்சது. தொடர்ந்து பயிற்சி எடுத்தான் இப்ப நேஷனல் மீட்ல ஜெயிச்சு இருக்கான். செயற்கை தரையில போட்டி நடக்கவும் இங்க இருக்குற மாதிரி இல்ல. இன்னும் நல்லா பண்ணியிருப்பான்” என்றார். டெனால்ட் மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்.

3

Leave A Reply

Your email address will not be published.