உயிர் வளர்ப்போம்-28

கதை வழி மருத்துவம் (அருளமுதம் எனும் அருமருந்து)

0

மூவாசைகள்

திருமந்திரத்தில் திருமூலர் பெருமான் “ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்” எனப் பாடுகிறார் இதற்கு காரணம் ஆசை அறுக்க பழகுதல் நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இறைவனை நன்கு உணர்ந்து இறைவனுடன் ஒன்றிவிட்ட ஞானிகள் கூட ஆசையால் தன் நிலையிலிருந்து விழுந்து உலக மாயைக்குள் சிக்கிய கதைகள் பல உள்ளன. ஆசைகள் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என மூவகைப்படும்.

பெண்ணாசை: விடலை பருவத்தில் தொடங்கி வாலிபத்தில் வலுத்து வயோதிகத்தில் மறையும் தன்மையை கொண்டது பெண்ணாசை. இது ஆணில் தொடங்கி பெண்ணில் நிறைவடைகிறது. எனவேதான் இது பெண்ணாசை என அழைக்கப்படுகிறது. ஆண் என்பவன் காமத்தை தோற்றுவிப்பவனாக பெண்ணைத் தேடி அடைக்கிறான், பெண் என்பவள் காமத்தை தனிப்பவளாக வண்டின் வருகைக்கு காத்திருக்கும் மலரைப் போல பூத்து இருக்கிறாள். உலகின் இரு பெரும் தத்துவங்கள் இணைந்து படைப்பை நடத்த இது அவசியமாகின்றது.

‌சந்தா 1

எனினும் மனிதனின் நல்வாழ்விற்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் இவ்வாசையை முறைப்படுத்தி நெறிப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காகத்தான் திருமணம் என்கிற பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கண்ணில் படுகிற எதிர் பாலினத்தவர் அனைவரின் மீதும் தோன்றக்கூடிய இந்த ஆசையை தனது மனதிற்கினிய துணையுடன் மட்டும் பகிரும் பொழுது இவ்வாசை ஒரு கட்டுக்குள் நின்று மனிதனின் உடலையும் மனதையும் நெறிப்படுத்தி வலுப்படுத்துகின்றது. கட்டுக்கடங்காமல் பாய்கின்ற இவ்வாசையால், மனிதன் தன்னுடைய இந்திரியத்தினை அதிக அளவில் விரையம் செய்து விரைவாக வயோதிகம் அடைய வழிவகுக்கின்றது. எனவே பெண்ணாசையை கட்டுக்குள் வைத்துக் கொள்வதே நல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.”

பெண்ணாசையை பற்றி யோகியார் கூறி முடிக்கையில் மந்திரியாரின் மனக்கண்ணில் சமீபத்தில் அவரிடம் தீர்ப்புக்கு வந்த வழக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. பெண் ஒருத்தி தன் கணவனிடமிருந்து விவாக இரத்து கோரி நீதி மன்றத்தை நாடி இருந்தாள். வழக்கை விசாரித்த பொழுது அப்பெண் தன் கணவர் மீது சந்தேக குணம், ஆணாதிக்கம், கொடுமைக்காரன் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தாள். எனினும் அவளது குற்றச்சாட்டுகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது கணவரின் ஆண்மை குறைபாடே ஆகும்.

சந்தா 2

மந்திரியார் அந்த வழக்கையும் யோகியாரின் பெண்ணாசை பற்றிய விளக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து குழம்பினார். பெண்ணாசை ஒரு ஆணிடம் பிறக்கிறது அப்படியிருக்க இந்த குறைபாடு என்பது எவ்வாறு சாத்தியம்? இதன் உண்மையான பின்னணி என்ன? தாம்பத்தியம் எப்படி சிறக்கும்? இல்லறத்தில் முழுமை பெறுவது எப்படி?  என பல்வேறு கேள்விகள் மந்திரியாரின் மனதினை துளைத்தெடுத்தன .  மெல்ல யோகியரிடம் தனது குழப்பத்தினை எடுத்துக்கூறி அதனை தெளிவுபடுத்தி அருளுமாறு வேண்டினார்.

மந்திரியாரின் ஐயம் அங்குள்ள அனைவருக்கும் நியாயமாகவே பட்டது. அரசவையில் நிலுவையில் உள்ள பல்வேறு குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காண மந்திரியாரின் கேள்விகளுக்கு விடை காண வேண்டும் என மன்னனும் யோகியாரிடம் வேண்டினான். இவர்கள் அனைவரின் ஐயப்பாடுகளை கேட்டு பலமாக நகைத்த யோகியார் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு பேச தொடங்கினார். “அன்பானவர்களே, இல்லறம் சிறக்க மேலும் தாம்பத்தியம் தழைக்க ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரின் மனப் பொருத்தம், பருவம் மற்றும் உடற் பொருத்தம் ஆகிய மூன்றும் அத்தியாவசியமானதாகும்.

நல்ல இல்வாழ்க்கைக்கு முதல் படி ஒரு ஆணுக்கு பெண்ணின் மீது முழுமையான ஈடுபாடும், காதலும் ஏற்படுதல் அவசியமாகும். ஒரு பெண்ணுக்கு ஆணின் மீது நம்பிக்கையும்   மனதிற்கு ஒவ்வாத எந்த ஒரு குணாதிசயம் ஒரு பெண்ணிடம் காணப்பட்டாலும் அப்பெண்ணை மணப்பதை அந்த ஆடவன் தவிர்த்தல் வேண்டும். இரு மனங்கள் இணையும் வைபவமே திருமணம் ஆகும்.  ஆண் பெண் ஆகிய இருவருக்கும் ஒருவரை ஒருவர் மனதார பிடித்திருக்க வேண்டும். பணம், சூழல், கட்டாயம், அவசரம் போன்ற வேறு எந்த காரணங்களுக்காகவும் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதை தவிர்க்க வேண்டும்.

நல்ல இல்வாழ்க்கைக்கு இதுவே முதல் படி. வாழ்க்கை துணையை தேடும் ஒருவர் தன்னுடைய மனதிற்கு எள்ளளவும் வஞ்சனை செய்யாது முழுவதும் மனதுக்கு ஏற்புடைய ஒரு துணையை தேடிப்பிடிக்க வேண்டும். இந்த தேடலின் பொழுது பொறுமை இன்றி தன்னுடைய மனதிற்கு விரோதமாய் தத்தம் துணையை தேர்ந்தெடுப்பதன் விளைவாகவே பிற்காலத்தில் இல்லறத்தில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றி இல்வாழ்க்கையை கசப்பானதாக மாற்றிவிடுகின்றது. இது தனக்கு மட்டுமின்றி தனக்கு துணையாக வருகின்றவருடைய சந்தோஷத்தையும் சேர்த்து குலைக்கின்றது. எனவே  துணை தேடும் படலத்தில் பொறுமை, கவனம், அறிவுத்திறன் ஆகிய கருவிகளை கைக்கொண்டு உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் முடிவெடுக்க வேண்டும்.

தொடரும்…

 

Leave A Reply

Your email address will not be published.