அறிவோம் தொல்லியல்-22 பயணங்கள் முடிவதில்லை…

0
1 full

இந்தவாரம் நம் தொல்தமிழி எழுத்து வரலாற்று தொடரிலிருந்து மாறுபட்டு, நம் திருச்சியிலுள்ள ஓர் சிதைவுற்ற கோவிலின் வரலாற்றை அறிவோம்.

நாற்பது வருடம் கழித்து வெளிவரும், காஞ்சியின் அத்தி வரதரை காண ஒரு பெருங்கூட்டம் இன்று காஞ்சியை நோக்கி படையெடுத்து வருகிறது, தற்சமயம் காஞ்சியை தொடர்ந்து சேலம் மற்றும் இன்னபிற நகரங்களில் *திடீர் அத்திவரதர்* உருவாக்கப்பட்டு மக்களுக்கு அருள்பாலித்து(?) வருகிறார்.

ஆனால் அவரை விட பழமையான பெருமாள் சிலைகள் இன்றும் கேட்பாரின்றி, புதர்களிலும், குப்பைக்கூழங்களிலும் புறக்கணிக்கப்பட்டு கிடத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். அவற்றுள் நம் திருச்சியிலுள்ள ஓர் விஷ்ணு சிலையையும், அச்சிலைக்குரிய கோவிலின் இன்றைய பரிதாப நிலையை இன்று காண்போம்.

2 full

*கொத்தமங்கலம் விண்ணகரம்:*

திருச்சி மாவட்டம் லால்குடியிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் காட்டூர் தாண்டி அமைந்துள்ளது இவ்வூர்.

இவ்வூரில் இரு சிவாலயங்களும், ஓர் பிரம்மாண்டமான பெருமாள் கோவிலும் இருந்த தடயமுள்ளது.

இப்பெருமாள் கோவிலின் அடித்தளம் கருங்கற்களாலும், விமானம் செங்கலாலும் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 முதல் 40 அடி வரை உயரமுள்ள கோவில் இது.

கோவிலின் உட்புற கருவறைச் சுவரில் சோழர்கால ஓவியங்கள் இருந்ததற்கான எச்சங்கள் தெரிகிறது!

கலைந்து கடக்கும் கோவிலின் தூண்களை   உற்று நோக்கினால் கிருஷ்ணரின் லீலை காட்சிகளை அழகிய குறுஞ்சிற்பங்களாக வடித்துள்ளனர். மேலும் குடக்கூத்து சிற்பம், ஆடல்மகளிர் சிற்பம், என தூண்களை கூட அழகுற வடித்துள்ளனர். கோவிலின் கருவறையிலிருந்து எடுக்கப்பட்டு வெளிப்புற திடலில் சயனகோலத்தில் விஷ்ணு சிலை கிடத்தி வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வுலகில் எதுவும் நிரந்தரமில்லை அதற்கு நானே சாட்சி என்பதுபோல் உள்ளது அவரின் குறுநகை. இவ்வாறு கேட்பாரற்று கிடக்கும் தனித்தன்மையுள்ள பெருமாளை விடுத்து அத்திவரதரை ஆராதித்து என்ன பயன்?

அகக்கண்களில் முழுமையாய் இக்கோவில் எவ்வாறு இருந்திருக்கும் என கற்பனைசெய்து பார்த்தால்  இக்கோவிலின் அன்றைய நிலை நிச்சயம் பிரம்மிப்பூட்டுவதாய் இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் கல்லறுக்க, சிற்பத்திற்கு அழகூட்ட நிறைய சாதனங்கள் வந்துவிட்டது.ஆனால் அன்றைய காலகட்டத்தில் இவ்வசதிகள் ஏதுமில்லாது உடல்உழைப்பையும், விஷயஞானமும் கொண்டு செய்த சிற்பிகள் செய்த உயிரோட்டமான சிற்பங்களை இன்று எவர் நினைத்தாலும் செய்யமுடியாது,

ஏற்கனவே இவ்வாறு கேட்பாரற்று கிடக்கும் கணக்கிலா சிற்பங்கள் சுபாஷ்கபூர் போன்ற சிலைதிருடர்களால் களவாடப்பட்டு நட்சத்திர உணவங்களிலும், வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும் இன்று காட்சிபொருளாக உள்ளது.

மீதமுள்ள நம் செல்வங்களையாவது காப்பாற்றுவது நம் கடமை, அதுவே அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் நம் அடையாளங்களாகும்.

இங்குள்ள ராஜராஜசோழனின் கல்வெட்டுபடி இவ்வூர் மழநாட்டின் கீழ் ஓர் பிரம்மதேயமாய்  இருந்துள்ளது. இறைவன் வாசுதேவ பெருமானடிகள் என அழைக்கப்பட்டுள்ளார். மேலும் இக்கோவிலுக்கு சோழப்பேரரசன் ராஜராஜன்   பொன்தானம் நிறைய  அளித்துள்ளார். தான் பிறந்த சதயநட்சத்திரதிருநாளில் சித்திரை மாதந்தோரும் விழா நடக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இப்பெருமாள் கோவிலுக்கு முன்னே சுமார் 8 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சிவலிங்கமும், ஓர் சிறிய சிவலங்கம், நந்திகள், சண்டேச நாயனார், விநாயகர், உடைந்த அம்மன் சிலைகள் உள்ளன. கோவிலின் வளாகத்திலேயே குடியிருப்புகள் வந்துவிட்டது.

தற்சமயம் காஞ்சி சங்கரமடமும், இந்து சமய அறநிலைய துறையும் இணைந்து முதலில் சிவன்கோவிலை கட்டிமுடித்து, பின் பெருமாள்கோவிலை சுத்தப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்தவாரம் சனிக்கிழமை கோவிலின் சிலைகள் ஊர்மக்கள் முன்னிலையில் பாலாலயம் செய்யப்பட்டது.

இனிமேலாவது இக்கோவில் காப்பாற்றப்படட்டும்.

இனியாவது இதுபோன்ற பழங்கோவில்களை புறக்கணிக்காது பேணிக்காப்போம். இக்கோவில்கள் பக்தியின் அடிப்படையில் மட்டுமின்றி வரலாற்று பூர்வமாகவும் உணர்தல் அவசியம்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.