ஆதிமகள் 24

0
full

பள்ளியின் மைதானத்தில் அமர்ந்து காயத்ரியும், அகிலாவும் பொதுவான விசயங்களை பேசிவிட்டு, காயத்ரியிடம் அகிலா தான் அழுததற்கான காரணத்தையும், தான் ஏன் காயத்ரியை காலையிலேயே பார்க்க வந்தேன் என்பதையும் பேச ஆரம்பித்தாள்.

தனது அக்காவின் திருமணத்திற்கு காயத்ரி வந்திருந்ததை அகிலா நினைவு கூர்ந்தாள். திருமணம் முடிந்து, சம்பிரதாயங்கள் அனைத்தும் நிறைவேறிய பின், அக்கா தனது கணவரின் ஊரான கும்பகோணத்திலே, தனிக்குடித்தனம் செல்ல, அவ்வப்போது அப்பா, அம்மாவுடன் சேர்ந்து தானும் அக்காவை பார்ப்பதற்கு அடிக்கொருதரம் கும்பகோணத்திற்கு சென்று வந்ததாக சொன்ன அகிலா, மேலும் தொடர்ந்து பேசாமல் அமைதியானாள்.

பேச்சை நிறுத்திவிட்டு, அவள் காத்த அமைதி, காயத்ரிக்கு பல்வேறு சிந்தனைகளை கண்முன் கொண்டு வந்தது.

poster

அகிலாவின் அக்கா திருமணத்திற்கு தான் சென்றபோது, தன்னை அவளது அக்காவின் கணவரிடம் அறிமுகப்படுத்தி, அவரது முன்பே தோளோடு தோளாக தன்னை அரவணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சந்தோசத்தில் அவள் ஆர்ப்பரித்ததும், புதுமண தம்பதிகளுடன் அமர்ந்து தன்னையும் உணவருந்தச் சொல்லி கட்டாயப்படுத்தியதுடன் அவர்களுடன் தானும் அமர்ந்து நால்வராய் உணவருந்தி மகிழ்ந்ததும், காயத்ரிக்கு இப்போது நினைவுக்கு வந்தாலும், அவளது அக்காள் கணவரின் முகம் சரிவர நினைவிற்கு வராமல் காயத்ரி தடுமாறினாள்.

பேசுவதை நிறுத்தி அமைதியாய் நின்றிருந்த அகிலாவை பார்த்து காயத்ரி கேட்டாள், “சரி அக்கா வீட்டிற்கு அடிக்கொருதரம் சென்று வந்தாய். அப்புறம் என்ன நடந்தது” எனக் கேட்டாள்.

இதைக் காயத்ரி அகிலாவிடம் கேட்ட தோரணை, அகிலா ஏதோ கதை சொல்வது போலவும், அதை ஏன் ஆரம்பத்திலே நிறுத்தி விட்டாய். தொடர்ந்து சொல் அகிலா, என கேட்பது போலவும் இருந்தது. இருப்பினும் அகிலாவிடம் காயத்ரி இப்படி கேட்பதை தவிர வேறு என்ன இந்த சூழலில் பேசிவிட முடியும்.

மைதானத்தில் புதிதாக மேலும் இரண்டொரு குழுக்கள் விளையாட்டில் இணைந்து கொண்டனர். முன்பு இருந்ததை விட மைதானத்தில் கூச்சல் அதிகமாக கேட்டது.

அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் தனது வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, காயத்ரி, அகிலா இருவரையும் கடந்து மைதானத்திற்குள் சென்று விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களை பார்த்து ஏதோ ஒரு பெயர் சொல்லி சத்தமிட்டு கூப்பிட்டார். தன்னை அழைக்கும் சத்தம் கேட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தனது கையை உயர்த்தி அசைத்தவாறே தன்னை அழைத்தவரை நோக்கி ஓடி வந்தவன், நேராக ஓடிச்சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்க அவனை அழைக்க வந்தவர் அவன் பின்னால் அமர்ந்து கொண்டார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே மைதானத்தை விட்டு வேகமாக வெளியேறினர். சிறுவனை வந்து அழைத்துச் சென்றவர் அவனது அப்பாவாக இருக்கக் கூடும் என காயத்ரி நினைத்துக் கொண்டாள்.

ukr

அகிலா மீண்டும் பேச ஆரம்பித்தாள். “ஆரம்பத்தில் மூன்று மாதம், நான்கு மாதத்திற்கு ஒரு முறை அப்பா அம்மாவுடன் அக்காவின் வீட்டிற்கு சென்று உடனடியாக திரும்பி விடும் நான், பின்பு நான் மட்டும் தனியாக அக்காவை பார்ப்பதற்காக மாதம் ஒருமுறை சென்று வர ஆரம்பித்தேன். முன்பெல்லாம் அக்காவை பார்த்தவுடன் திரும்பிவிடுவேன், ஆனால் போகப் போக இரண்டு நாள் மூன்று நாள் என தங்க ஆரம்பித்தேன். சில சமயங்களில் வாரக்கணக்கிலும் தங்குவதுண்டு. இந்த சமயத்தில்தான் அக்கா கருவுற்றிருந்தாள். அப்பாவும், அம்மாவும் கூட அக்காவிற்கு உதவியாக இருக்கட்டுமே என்று நான் அதிக நாட்கள் அக்காவின் வீட்டில் தங்குவதற்கு மறுப்பு எதுவும் கூறாமல் விட்டுவிட்டார்கள்.

நான் தங்கியிருந்த அக்கா வீட்டின் எதிர் வீட்டில், ஒரே ஒரு அறையுடன் கூடிய மொட்டை மாடி இருந்தது. ஒருநாள் அதிகாலை நேரம் நான் தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடிக்கு நான் யதார்த்தமா சென்ற போது நான் நின்றிருந்த எதிர் வீட்டு மாடியில் யாரோ இளைஞன் ஒருவன் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தான். பொழுது விடியும் சமயம், கிழக்கு நோக்கி எந்தவித சிரமமுமின்றி அவன் செய்த தேகப் பயிற்சி, எழும் சூரிய வெளிச்சத்தில் பார்ப்பதற்கு இசைவாக இருந்தது. எவ்வளவு நேரம் அவனையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை.

ஏதோ ஒரு நடன அசைவை ஒத்து அவனது பயிற்சி முழுமை பெற்றது போலிருந்தது, அவனது அங்க அசைவுகளால், சூரியனின் மஞ்சள் வெளிச்சம் அவனது தேகம் மீது மென்மையாக படர, படர நான் அவனை பார்த்துக் கொண்டிருக்கும் போதே என் கண்களிலிருந்து அவன் மறைந்து போயிருந்தான். இருப்பினும் அவன் நின்று அசைந்திருந்த இடங்கள் எல்லாம் அவனது காட்சி புகையாய் தோன்றி மறைந்தது. ஐஸ் கட்டி உருகி வடிந்து மறைந்தது போல், நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவன் மறைந்து போனது, எனக்கு என்னவோ போலிருந்தது. காரணமின்றி அவன் முகத்தை என் மனது தேடியது.

ஏன் என்றே தெரியவில்லை. அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின்பும், என்னில் எந்த உணர்வு அந்த இடத்தில் அவன் இருப்பது போல் மெய்யாய் எனக்கு பாவனை செய்தது என்றும் புரியவில்லை.

அன்று தொடங்கி இன்று வரை நடந்தது எல்லாமே, யதார்த்த உண்மையா அல்லது கனவா என்று தெளிவு பிறக்கவே எனக்கு சில நாட்கள் ஆனது, எனக் கூறிய அகிலா, காயத்ரி ஏதோ தன்னிடம் கேட்க வருவது போல் தோன்ற அவளையே உற்றுப் பார்த்தாள்.

ஆனால் காயத்ரி எதுவும் பேசவில்லை. சில நாட்களுக்கு முன்பு என்றால் கூட, அகிலாவின் உணர்வுகளை காயத்ரியால் புரிந்து கொண்டிருக்க முடியாது. ஆனால் இன்று காயத்ரியால் அகிலாவின் உணர்வை, நிலையை ஒருவாறு அவளால் யூகிக்க முடிந்தது.

காயத்ரிக்கு காரணமே இன்றி விஷாலியின் நினைவும், அவள் காதலித்து திருமணம் செய்து கொண்ட கோகுல கிருஷ்ணனும் காயத்ரியின் நினைவிற்கு வந்து போயினர். கரணை உடனே பார்க்க வேண்டும் போல் திடீரென ஆவல் அவளுக்கு தோன்றியது. முற்றிலுமாக அகிலாவின் நினைவிலிருந்து கரணின் பக்கமாக அவள் மனம்தாவியது. காயத்ரிக்கு அது அதிர்ச்சியாய் இருந்தது. அகிலா காயத்ரியின் தோளை உலுக்கி “என்ன யோசனை” எனக் கேட்டபோது யதார்த்த சூழலுக்கு மீண்டும் திரும்பினாள் காயத்ரி.

மீண்டும் அகிலா பேச ஆரம்பித்தபோது மைதானத்தில் கூச்சல் மேலோங்கி இருந்தது.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.