திருப்பைஞ்சீலியில் நீலிவனேஸ்வரர் கோவில் தேரோட்டம்

0

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி உடனுறை நீலிவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் தினமும் காலை பல்லக்கிலும், இரவில் சேஷ வாகனம், கிளி, காமதேனு, ரிஷபம், அன்னம், யாளி போன்ற வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு தங்க குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடாகி கோவிலை வலம்வந்து வையாளி கண்டருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் விசாலாட்சி அம்மன் தேரில் எழுந்தருளினார். மதியம் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பைஞ்சீலி, மூவராயண்பாளையம், வாழ்மால்பாளையம், கவுண்டம்பட்டி, ஈச்சம்பட்டி, சுனைப்புகநல்லூர், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

food

விழாவில் திருச்சி புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டி.டி.சி.சேரன், ஒன்றிய செயலாளர் க.அன்புசெல்வம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கவுண்டம்பட்டி ஆர்.சி.எஸ்.கேபிள் ஆர்.செந்தில்குமார், ஈச்சம்பட்டி அ.தி.மு.க. பிரமுகர் பி.தியாகராஜன், ஸ்ரீ நம்பியப்பா திருமண மண்டப உரிமையாளர் டி.செல்வம், அரசு இ-சேவை மையம் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அன்னதானம்

தேரோட்டத்தையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி செயலாளர் பி.சிவலிங்கம் தலைமையில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மதிவாணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டிருந்தனர்.

ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் மெல்கியுராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மண்ணச்சநல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன் உத்தரவின்படி திருச்சி உதவி ஆணையர் ராணி மேற்பார்வையில் கோவில் செயல் அலுவலர் முத்துராமன் மற்றும் கிராம பட்டயதாரர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். இன்று(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தேர்கால் பார்த்தலும், நடராஜர் புறப்பாடும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் சுவாமி புறப்பாடும் நடை பெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறும்.

 

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.