திருச்சியில் நகைக்காக அக்காவை கடத்திக் கொன்ற தம்பி கைது !  

0
gif 1

நகைக்காக அக்காவை கடத்திக் கொன்ற தம்பி கைது !

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகம். அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஜீவா. இவர்களுடைய மகள் சுதா (வயது 24). இவர் கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ராஜ்குமார் என்பவருக்கும், சுதாவுக்கும் திருமணம் நடந்தது. சுதாவின் பெரியப்பா மகனான செல்லிப்பாளையத்தை சேர்ந்த ஜெயராமனின் மகன் யோகேஸ்வரன் (27), சுதாவை வேலைக்கு அழைத்துச் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சுதா, கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி, இரவு வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டு மாலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அன்று இரவு 8 மணிக்கு ஜீவாவுக்கு போன் செய்து, சுதா ஏன் வேலைக்கு வரவில்லை? என்று கேட்டுள்ளனர். அதன் பின்னரே சுதா வேலைக்கு செல்லாதது தெரியவந்தது. சுதா வீடு திரும்பாத நிலையில், மறுநாள் பல இடங்களில் உறவினர்கள் அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

gif 3

இது குறித்து 2 நாட்களுக்கு பின்னர் சுதாவின் தாய் ஜீவா, துறையூர் போலீஸ் நிலையத்தில் அப்போது சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜெயசித்ராவிடம் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சிலநாட்கள் கழித்து யோகேஸ்வரன் மற்றும் தனது பெரியப்பா மகனான தா.பாதர் பேட்டையை சேர்ந்த ரெங்கராஜ் (37) ஆகியோர் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாக, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசித்ராவிடம் ஜீவா கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு காத்திருந்தவர்களை, மதியமாகி விட்டதால் சாப்பிட்டுவிட்டு வருமாறு, போலீசார் கூறியுள்ளனர். இதனால் ரெங்கராஜ், யோகேஸ்வரன் ஆகியோரை ஒரு வக்கீல் சாப்பிட அழைத்து சென்றுள்ளார். பின்னர் ரெங்கராஜும், யோகேஸ்வரனும் தலைமறைவாகிவிட்டனர். இதனால் அந்த வழக்கு விசாரணையின்றி கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு ராஜ்குமார், மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். பின்னர் ராஜ்குமார் 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சுதா காணாமல் போன வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி கடந்த 2014-ம் ஆண்டு சண்முகம், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சுதா மாயமானது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில், முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மாறன் மேற்பார்வையில் துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் மணிகண்டன், கருணாநிதி, கோவிந்தராஜ், செந்தில்குமார், அசோக் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அப்போது தனிப்படை போலீசாரிடம், ரெங்கராஜ், யோகேஸ்வரன் ஆகியோர் மீது சந்தேகம் உள்ளதாக சுதாவின் பெற்றோர் தெரிவித்தனர். அதன்பேரில் சென்னை தாம்பரத்தில் தங்கி மாதம்பாக்கம் பகுதியில் ‘கால் டாக்சி‘ டிரைவராக வேலை பார்த்த ரெங்கராஜ், யோகேஸ்வரன் ஆகியோரை தனிப்படையினர் பிடித்து துறையூர் அழைத்து வந்து விசாரித்தனர்.

gif 4

போலீஸ் விசாரணையில், சுதா கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. மேலும் விசாரணையில் தெரியவந்ததாவது:-

யோகேஸ்வரன் காதலித்த பெண் கர்ப்பமாகியுள்ளார். அவருடைய கர்ப்பத்தை கலைக்க பணம் தேவைப்பட்டதால் யோகேஸ்வரனும், ரெங்கராஜிம் சுதாவிடம் பணம் அல்லது நகை தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே சுதா நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த யோகேஸ்வரன், சுதாவை காரில் ஏற்றிச் சென்றார். தீரன்நகர் அருகே சென்றபோது ரெங்கராஜும் காரில் ஏறிக்கொண்டார்.

அவர்கள் கொத்தம்பட்டி பாலம் அருகே மெயின்ரோட்டில் இருந்து பிரிந்து செல்லும் மண் சாலையில் சுதாவை கடத்திச் சென்று, பணம் கேட்டுள்ளனர். அவரிடம் பணம் இல்லை என்றதால், சுதா அணிந்திருந்த நகையை கேட்டுள்ளனர். ஆனால் அவர் தராததால், ஆத்திரமடைந்த 2 பேரும் காருக்குள் வைத்து சுதாவின் துப்பட்டாவால் அவருடைய கழுத்தை நெறித்துள்ளனர். பின்னர் சுதாவின் கையில் இருந்த 6 பவுன் தங்க வளையல்கள், 3 பவுன் தங்கத் தோடு, மூக்குத்தி, மோதிரம் ஆகியவற்றை கழற்றிக் கொண்டனர். இதில் ஒரு காது மற்றும் மூக்கில் இருந்த நகையை கழற்ற முடியாமல், பிளேடால் அறுத்து நகையை பறித்துள்ளனர்.

இதையடுத்து சுதாவின் உடலை நாமக்கல் அருகே தத்தாத்திரிபுரம் பெரியாண்டவர் கோவில் செல்லும் வழியில் உள்ள புதருக்குள் வீசியுள்ளனர். அப்போது சுதாவின் உடலில் உயிர் இருக்கலாம் என்று கருதி அருகில் இருந்த பாறாங்கல்லை எடுத்து சுதாவின் முகத்தில் போட்டு சிதைத்துள்ளனர். அவர் உயிரிழந்ததை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து அவர்கள் காரில் சென்றுள்ளனர். மேலும் பாறாங்கல்லில் கைரேகை இருக்கலாம் என்று பயந்து, பாறாங்கல்லை காரில் எடுத்துச் சென்று கழுவி ரெங்கராஜ் வீட்டருகே வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்த மறுநாள் சுதாவின் உடலை கைப்பற்றிய நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் சுதாவை பற்றிய விவரம் போலீசாருக்கு தெரியவில்லை. பிரேத சோதனையில், சுதாவின் தலையில் மண்டை ஓட்டு எலும்பு உடைந்திருப்பதும், கழுத்து நெறிக்கப்பட்டதும், உடலில் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். மேலும் அது பற்றிய விவரங்களை மாநில குற்றப்பிரிவு ஆவணக்காப்பகத்துக்கு அனுப்பி, தமிழ்நாடு முழுவதும் காணாமல் போனவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து, இறந்து போன சுதாவின் அடையாளம் காண முயற்சி செய்தனர்.

ஆனால் அந்த சமயத்தில் துறையூர் போலீஸ் நிலையத்தில் சுதா மாயமானது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்படாததால், சுதா குறித்த விவரம் மாநில குற்றப்பிரிவு ஆவணக்காப்பகத்துக்கு அனுப்பப்படவில்லை. இதனால் கொலையானவர் பற்றிய அடையாளம் காண முடியாததால், சுதா கொலை வழக்கு விசாரணையை புதுச்சத்திரம் போலீசார் கைவிட்டுள்ளனர்.

இந்த தகவல் அனைத்தும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ரெங்கராஜையும், யோகேஸ்வரனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரையும், பாறாங்கல்லையும், ரெங்கராஜிடம் இருந்து 6 பவுன் தங்கக்கம்பியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை துறையூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, துறையூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் கொலையாளிகளை கைது செய்த தனிப்படையினரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.